இந்தியா

நீட் தேர்வுக்குக் காரணம் திமுக-காங். கூட்டணிதான்: அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

10th Feb 2022 02:00 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது, சுகாதாரத் துறை இணையமைச்சராக காந்தி செல்வன் இருந்தபோதுதான் மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டது. ஆனால், அவர்கள் இப்போது தமிழகத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர் என்று தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் ப.ரவீந்திரநாத் மக்களவையில் குற்றம்சாட்டினார்.
 மத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
 இந்த நிதிநிலை அறிக்கையில் பிரதமரின் விரைவுச்சக்தி (கதி சக்தி) திட்டத்தின் கீழ் நாட்டில் உள்கட்டமைப்பில் 7 முயற்சிகளில் நிலையான வளர்ச்சிக்கு முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது பாராட்டுக்குரியது. இதேபோன்று ரசாயனம் இல்லாத விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான கங்கை கரையில் திட்டம், விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரத்தைப் பெருக்கும் கென், பெட்வா நதிகள் இணைப்பு, வீடுகளுக்கு கூடுதலாகக் குடிநீர் இணைப்பு போன்ற திட்டங்களால் விவசாயம் வளர்ச்சி பெறும்.
 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக இடம் பெற்றிருந்தது. இந்தச் சமயத்தில் 2010, டிசம்பர் மாதம் மருத்துவக் கல்வி தொடர்பாக ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டது. எம்பிபிஎஸ் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு ஒருமுக நுழைவாக தேசிய தகுதிகாண் தேர்வு (நீட்) அறிவிக்கப்பட்டது. பின்னர் 2012, பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
 இந்தச் சமயத்தில் மத்தியில் காங்கிரûஸச் சேர்ந்த 2 பேரும், திமுகவைச் சேர்ந்த 7 பேரும் அமைச்சர்களாக இருந்தனர். குறிப்பாக, சுகாதாரத் துறை இணையமைச்சராக திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் இருந்தார். இதற்கான சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஒன்றாக உட்கார்ந்து நீட் தேர்வை சட்டப்பூர்வமாக ஆக்கிவிட்டு இப்போது தமிழகத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT