இந்தியா

கிரிப்டோகரன்சிக்கு வரி விதிப்பு: திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

10th Feb 2022 02:02 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

சட்ட விரோத கிரிப்டோகரன்சிக்கு மத்திய அரசு 30 சதவீதம் வரி விதித்ததன் மூலம் அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் முகமது அப்துல்லா மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார்.
 மாநிலங்களவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை குறித்த விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
 மெய்நிகர் முறையிலான பணப் பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சிக்கு நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி நாட்டில் இன்னும் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கான ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை. ஆனால், 30 சதவீதம் வரியை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இந்த வரியை செலுத்துவதன் மூலம் அது சட்டப்பூர்வமானது எனக் காட்டுகிறது. ஆனால், இது இன்னமும் சட்டவிரோதமாகவே உள்ளது. வரி செலுத்தியிருந்தால் சட்டவிரோதமான மருந்துகளையும் விற்க முடியுமா? இந்த இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?
 மற்றொரு விவகாரம், நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வைரத்துக்கு 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு பெண்ணுக்கு எது முக்கியம்? சுகாதாரமா அல்லது வைரமா?.
 மத்திய அரசு தமிழ்நாட்டையும், தமிழர்களையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டையையும் தஞ்சாவூரையும் இணைக்கும் ரயில் திட்ட ஆய்வு சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளை ஹைட்ரோகார்பன் திட்டம் ஆட்டிப்படைக்கிறது என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT