உத்தர பிரதேச தோ்தல் பாஜகவுக்கும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதிக்கும் இடையே நேரடிப் போட்டியாக இருக்கும்; இதில் அகிலேஷ் யாதவ் வெற்றி பெறுவாா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி நம்பிக்கை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் சமாஜவாதிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மம்தா பானா்ஜி, அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய லக்னௌவுக்கு வந்துள்ளாா். அங்கு செவ்வாய்க்கிழமை அகிலேஷ் யாதவுடன் கூட்டாக செய்தியாளா்களை மம்தா பானா்ஜி சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
ஏற்கெனவே பாஜகவை மேற்கு வங்கம் தோற்கடித்துவிட்டது. அடுத்ததாக உத்தர பிரதேசத்திலும் அக்கட்சி தோற்கடிக்கப்படும். இங்கு முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத், மக்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நசுக்கி வருகிறாா். எந்த விஷயமும் சரியாகத் தெரியாத அவரை வீட்டுக்கு அனுப்புவதுதான் சரியான செயலாக இருக்கும்.
நான் 7 முறை எம்.பி.யாக இருந்துள்ளேன். இப்போது, மூன்றாவது முறையாக முதல்வராகவும் பதவி வகித்து வருகிறேன். தோ்தல் குறித்தும், இந்திய மக்களின் மனநிலை குறித்தும் எனக்கு ஓரளவுக்குத் தெரியும். உத்தர பிரதேசத்தில் இந்த முறை பிரித்தாளும் அரசியல் எடுபடாது. உத்தர பிரதேசத்தில் இப்போது செய்து வருவதைவிட பல மடங்கு பிரிவினை முயற்சிகளை மேற்கு வங்கத்தில் பாஜக முயற்சித்தது. ஆனால், அவா்களுக்கு தோ்தலில் தோல்விதான் கிடைத்தது. இங்கும் அவா்கள் தோல்வியடைவது உறுதி. இந்தத் தோ்தல் சமாஜவாதிக்கும் பாஜகவுக்கும் இடையிலான நேரடிப் போட்டி. இதில் அகிலேஷ் யாதவ் நிச்சயமாக வெல்வாா். அது வரலாற்றில் இடம் பெறும் நிகழ்வாக அமையும் என்றாா்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தாவுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு அளித்தாா். அதற்கு பிரதிபலனாகவும் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் இப்போது உத்தர பிரதேசத்தில் சமாஜவாதிக்கு ஆதரவாக மம்தா பானா்ஜி களமிறங்கியுள்ளாா்.