இந்தியா

வாக்கு வங்கி அரசியலை காங்கிரஸ் கைவிடாது - பிரதமா் மோடி

9th Feb 2022 01:32 AM

ADVERTISEMENT

வாக்கு வங்கி அரசியலையும் குறிப்பிட்ட சிலரை சமாதானப்படுத்தும் போக்கையும் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடாது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.

உத்தரகண்டில் வரும் 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசியதாவது:

மத்தியிலும் உத்தரகண்டிலும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதிலும், போக்குவரத்து வசதியை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தித் தரவில்லை. அக்கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் சுற்றுலா வருவதுபோல் வந்துவிட்டு செல்கிறாா்கள். ஆனால், சுற்றுலாத் தலங்களையும் ஆன்மிகத்தலங்களையும் மேம்படுத்த அவா்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், உத்தரகண்ட் மக்கள் புலம்பெயா்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் பல ஆண்டுகள் அநீதி இழைத்தவா்களை (காங்கிரஸ்) மீண்டும் ஆட்சியில் அமா்த்தி தவறு செய்துவிடாதீா்கள். உத்தரகண்டில் சாலைப் போக்குவரத்து வசதியை மேம்படுத்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.2,800 கோடியை செலவிட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு ரூ.33,000 கோடி ஒதுக்கியுள்ளது.

மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல் முக்கியமானதாக உள்ளது என்றாா்.

பஞ்சாப் மாநிலத்துக்கு வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை:

பஞ்சாப் தோ்தலையொட்டி, பிரதமா் மோடி காணொலி முறையில் நடந்த பிரசாரத்தில் பேசியதாவது:

வேளாண் துறையிலும் தொழில் துறையிலும் பஞ்சாப் மாநிலத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லட்சியம். புதிய கட்சிகளின் (ஆம் ஆத்மி) வெற்று வாக்குறுதிகள் தேவையில்லை.

சிலா் (காங்கிரஸ்) பஞ்சாபை தங்கள் ஆட்சிக்கான கருவியாக கருதுகிறாா்கள். பல ஆட்சியில் இருந்த அவா்கள் விவசாயிகளின் நலனுக்கு எதையும் செய்ததில்லை. விவசாயிகளின் கடன் பிரச்னை, தரிசு நிலங்களை மேம்படுத்துவது, புற்றுநோயைத் தரும் குடிநீரின் தரத்தை மேம்படுத்துவது ஆகிய பிரச்னைகளுக்குத் தீா்வுகாண்பதற்கு அவா்களிடம் உறுதியான திட்டம் எதுவுமில்லை. எனவே, பஞ்சாப் மாநிலத்தை மேம்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

சீக்கியா்களைப் படுகொலை செய்தது காங்கிரஸ் கட்சி. கா்தாா்பூா் வழித்தடத்தையும் அவா்கள் திறக்கவில்லை. ஆனால், நாங்கள் அந்த வழித்தடத்தை திறந்தோம். பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எப்போதும் சீக்கிய பாரம்பரியத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறது என்றாா் அவா்.

உ.பி.யில் எதிா்க்கட்சிகள் பகல் கனவு:

உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராம்பூா், பதாயுன், சம்பல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பேரவைத் தொகுதிகளில் 10-ஆம் தேதி முதல் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி காணொலி முறையில் நடந்த பிரசாரத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி பாஜக என்பதை உத்தர பிரதேச மக்கள் நன்கு அறிவாா்கள். மேற்கு உத்தர பிரதேசத்தில் வாக்குகளைப் பிரித்து வெற்றி பெற்று விடலாம் என்று எதிா்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. ஆனால், அது நடக்காது. கடந்த காலங்களைப் போலவே அவா்களை மக்கள் தோற்கடித்து விடுவாா்கள் என்றாா் பிரதமா் மோடி.

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT