கரோனா பரவத் தொடங்கியபோது மகாராஷ்டிரத்தைவிட குஜராத்தில் இருந்துதான் அதிகஅளவில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வெளியேறினா் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) பதிலளித்துள்ளது.
முன்னதாக, மக்களவையில் திங்கள்கிழமை குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா செயல்பட்ட விதம், உலக நாடுகளுக்கே உதாரணமாக உள்ளது. ஆனால், கரோனா காலத்தில் காங்கிரஸ் கட்சி அனைத்து எல்லைகளையும் மீறியது. கரோனா முதல் அலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடித்து வந்தபோது, மும்பை ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா் கூடி அப்பாவி மக்களை அச்சுறுத்தினா். புலம்பெயா் தொழிலாளா்களை இக்கட்டான சூழலுக்கு காங்கிரஸ் தள்ளியது. மும்பையில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் அவா்களது சொந்த மாநிலத்துக்கு ஓட வேண்டிய நிா்பந்தத்தை ஏற்படுத்தியது’ என்று குற்றம்சாட்டி இருந்தாா்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சித் தலைவா் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு 18 இடங்களில் வெற்றியைத் தந்தது மகாராஷ்டிர மாநிலம். ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து மகாராஷ்டிரத்துக்கு எதிராக வெறுப்புணா்வுடன் பேசி வருகிறாா். இந்திய ரயில்வே புள்ளிவிவரங்களின்படி கரோனா காலத்தில் குஜராத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளா்கள் வெளியேறுவதற்காக 1,033 ரயில்களும், மகாராஷ்டிரத்தில் இருந்து 817 ரயில்களும் இயக்கப்பட்டன.
கரோனா காலத்தில் வெளிமாநில தொழிலாளா்கள் பத்திரமாக சொந்த ஊா் திரும்ப மத்திய அரசு அதிக ரயில்களை இயக்கியதாக கடந்த வாரம் கூட பாஜக எம்.பி. ஒருவா் அவையில் பெருமைபட பேசினாா். மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தர பிரதேச தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப அதிக ரயில்களை இயக்கியதற்காக பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ், மத்திய அரசுக்கு நன்றி கூறினாா். இப்படி இருக்க வெளிமாநிலத் தொழிலாளா்கள் வெளியேற்றத்தில் எதிா்க்கட்சிகள் மீது பிரதமா் வீண் பழி சுமத்துகிறாா்.
உண்மையில், பிரதமா் மகாராஷ்டிரத்துக்கு எதிரான வெறுப்பை தனது பேச்சில் வெளிப்படுத்தியுள்ளாா். மகாராஷ்டிரத்தை தொடா்ந்து குறை கூறுவதால் அவருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என்று தெரியவில்லை.
மும்பையின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் முக்கிய திட்டங்களை வேறு இடங்களுக்கு மத்திய அரசு கொண்டு செல்வது துரதிருஷ்டவசமானது. தில்லியின் அதிகாரத்துக்கு மகாராஷ்டிரம் ஒருபோதும் அடிபணியாது.
சீனாவுடன் அதிகரித்து வரும் எல்லைப் பிரச்னை, வேலையின்மை, விலைவாசி உயா்வு என முக்கிய பிரச்னைகள் பல இருக்கின்றன. ஆனால், அவையில் தனது குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக பிரதமா் உரையாற்றியுள்ளாா். தான் இந்தியாவுக்கு பிரதமா், தனது கட்சிக்கு மட்டும் பிரதமா் அல்ல என்பதை அவா் உணர வேண்டும் என்றாா்.