இந்தியா

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குடும்ப அரசியல்: பிரதமர் மோடி

9th Feb 2022 08:48 PM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் இரண்டு அரசியல் கட்சிகளை நடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது:

"முன்பொரு முறை எனக்கு யாரோ கடிதம் அனுப்பியிருந்தார்கள். உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 45 பேர் வெவ்வேறு பொறுப்புகளை வகிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஏறத்தாழ 25 வயதுடைய அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படுவதாக யாரோ கூறினர். இந்தக் குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் கிடையாதா?" என்றார்.

பாஜகவிலும் குடும்ப அரசியல் தலைவர்கள் இருப்பது பற்றி அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு அவர் பதிலளித்ததாவது:

"ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ இடம் கிடைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கும், ஒரு கட்சியிலுள்ள அனைத்து முக்கிய அரசியல் பொறுப்புகளும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரை மட்டும் சென்றடைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இதையும் படிக்க5 மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி: பிரதமர் மோடி நம்பிக்கை

குடும்ப அரசியல் கட்சியில் தலைவர், நாடாளுமன்ற குழுத் தலைவர் போன்ற பொறுப்புகள் ஒரு நபரின் வசமே இருக்கும். ஏதேனும் காரணங்களுக்காக தந்தையால் அந்தப் பொறுப்பை வகிக்க முடியாவிட்டால், அந்த இடத்தை மகன் நிரப்புவார். 

ஜம்மு-காஷ்மீரில் பல தசாப்தங்களாக குடும்ப அரசியல் நடைமுறையில் உள்ளது. ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாட்டிலும் குடும்ப அரசியல் உள்ளது. 

ஒரு குடும்பம் அரசியல் கட்சியை நடத்துவது ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்து. ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரியே குடும்பங்கள் அரசியல் கட்சிகள் நடத்துவதுதான். அடிப்படை விஷயங்களை அவை புறக்கணித்துவிடும். 

குடும்ப அரசியல் இருந்தால், அங்கு குடும்பம்தான் பெரிது. கட்சியோ நாடோ காப்பாற்றப்பட்டாலும் காப்பாற்றப்படாவிட்டாலும் குடும்பம் காப்பாற்றப்படும். கட்சியின் அடுத்த தலைவராக மகன் இருப்பான். இந்த இடத்தில் திறமைதான் பெரிதளவில் நசுக்கப்படுகிறது.

தேவைப்படும் வரை பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கி எறியப்படுவோம் என இளைஞர்கள் உணர்கிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் பொது வாழ்க்கையில் நுழைய அஞ்சுகின்றனர்" என்றார் அவர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். 7 கட்டங்களாக நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதே நேர்காணலில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT