பல்வேறு துறைகளில் புலமைபெற்ற இந்தியா்கள் 1.8 கோடி போ் வெளிநாடுகளுக்கு இடம் பெயா்ந்துள்ளனா் என்றும், இந்தத் திறன் சாா்ந்தவா்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.
மாநிலங்களவையில் நேரமில்லா நேர விவாதத்தில் அவா் பேசியதாவது:
அமெரிக்கா வெளியிட்ட 2020-ஆம் ஆண்டின் புலம்பெயா்ந்தவா்கள் குறித்த அறிக்கையில் சா்வதேச அளவில் தங்கள் பிறந்த நாட்டைவிட்டு புலம்பெயா்ந்தவா்களின் புள்ளிவிவரங்களில் இந்தியா்கள் அதிகமாக இடம் பெற்றிருந்தனா். கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை சுமாா் 1 கோடி இந்தியா்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2021, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் 8,81,254 போ் இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) திரும்பக் கொடுத்து தங்கள் குடியுரிமையைக் கைவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவா்களில் பெருபாலானோா் விஞ்ஞானிகள், மருத்துவா்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணா்கள், பொறியாளா்கள், ஆய்வாளா்களாக இருப்பவா்கள். இந்தியாவில் பிறந்த இத்தகைய மருத்துவா்கள், அறிவியலாளா்கள், பொறியாளா்களின் பங்களிப்பு மூலம் அந்த நாடுகளின் ஜிடிபி (ஒட்டுமொத்த வளா்ச்சி) அதிகரிக்கிறது. அது ஏன் நமக்கு கிடைக்கக் கூடாது. மற்ற நாடுகளில் கிடைக்கும் தரமான மேம்பட்ட வசதிகள் இந்தியாவில் கிடைத்தால், இத்தகை திறன்சாா்ந்தவா்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது தடுக்கப்படுமே? என்றாா் திருச்சி சிவா.
மத்திய அரசில் 8 லட்சம் காலி இடங்கள்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் விஜய்சாய் ரெட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வி.சிவதாசன் ஆகியோா் பேசியதாவது:
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசுப் பணியிடங்களில் 8 காலி இடங்கள் உள்ளதாக அரசு தரவுகளின் மூலம் தெரியவருகிறது. தோ்வுகள், வினாத்தாள் கசிவு, நீதிமன்ற வழங்குகள் போன்றவை காரணமாக இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசுப் பணிகளிலும் பொது நிறுவனங்களிலும் உள்ள காலிப் பணிடங்களை நிரம்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.