இந்தியா

மிகவும் முதலாளித்துவமான பட்ஜெட் உரை: ப. சிதம்பரம்

1st Feb 2022 05:23 PM

ADVERTISEMENT

 

இதுவரை நிதியமைச்சர்கள் வாசித்த நிதிநிலை அறிக்கைகளில் இதுவே மிகவும் முதலாளித்துவமான உரை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை மீதான உரை 1 மணி நேரம் 31 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளில் விரிவடைவதற்கு அடித்தளமாக இந்த நிதிநிலை இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம், நிதிநிலை அறிக்கையில் ஏழைகளுக்கான நிதியுதவி, சிறு குறு நடுத்தர தொழில், வேலைவாயப்பை இழந்தவர்கள் குறித்து ஒருசொல்கூட இடம்பெறவில்லை என விமரிசித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் கூறியதாவது:

"பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளது, ஏறத்தாழ 60 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளது என ஏராளமான சவால்கள் நம்முன் உள்ளன. இந்த நிதர்சனங்கள் அனைத்தும் நிதியமைச்சர் முன்பு இருந்திருக்க வேண்டும்.

இதையும் படிக்கபொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்

ஆனால், இந்தப் பெரும் சவால்களுக்குத் தீர்வு காண நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லை. 

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை நிதியமைச்சர் முன்வைப்பது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. நிகழ்காலத்துக்கு எவ்வித கவனமும் தேவையில்லை என்றும் நிகழ்காலத்தில் வாழும் மக்கள் 25 ஆண்டுகளுக்கு பொறுமை காக்க வேண்டும் என்றும் அரசு நம்புகிறது. இது நாட்டு மக்களை குறிப்பாக ஏழைகளை கேலிக்குள்ளாக்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கான நிதியுதவி குறித்து நிதிநிலை அறிக்கையில் ஒரு சொல்கூட இடம்பெறவில்லை. வேலைவாய்ப்பை இழந்தவர்கள், பள்ளிகளில் ஒரு கட்டத்துக்கு மேல் படிப்பைத் தொடங்க முடியாவதற்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது, சிறு குறு நடுத்தர தொழில் மீட்டெடுப்பது உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் ஒரு சொல்கூட இல்லை.

இதுவரை நிதியமைச்சர்கள் வாசித்த நிதிநிலை அறிக்கைகளில் இதுவே மிகவும் முதலாளித்துவமான உரை. நிதிநிலை அறிக்கையில் ஏழை என்ற சொல் இரண்டு முறை மட்டுமே உச்சரிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

Tags : budget
ADVERTISEMENT
ADVERTISEMENT