இந்தியா

தில்லி பாலியல் வன்கொடுமை: மனதை உறைய வைக்கும் தாக்குதல்; விடியோ

1st Feb 2022 11:52 AM

ADVERTISEMENT

தில்லியில் 20 வயதான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவர் தலைமுடியை வெட்டி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவத்தில் நடந்த தாக்குதல் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த இந்தியக் குடியரசு நாளில்(ஜன.26) தில்லியின் ஷாதரா மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூர்பா நகரில் முன்பகை காரணமாக ஒரு கும்பல் 20 வயதான இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அவரின் தலைமுடியை வெட்டி செருப்பு மாலை அணிவித்து  ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதை வேடிக்கைப் பார்த்த அக்கம்பக்கத்தினரும் அப்பெண்ணுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சில பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அடிக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் அவர் டிவிட்டர் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கும் விடியோவை வெளியிட்டு ’இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். தில்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்’எனத் தெரிவித்தார். 

ADVERTISEMENT

அதன்பின் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் 14 வயது சிறுவன், 8 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். 

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘20 வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் குழப்பமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்’ என டிவிட்டரில் பதிவிட்டார்.

மேலும், இச்சம்பவம் சமூகத்தின் கோரமான முகத்தைக் காட்டுவதாக பலரும் கருத்துத் தெரிவித்து வரும்நிலையில், மனதை உறைய வைக்கும் அளவிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணை சில சிறுவர்களும் பெண்களும் கொடூரமாகத் தாக்கும் விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT