இந்தியா

மகளிா் ஆணையங்களின் செயல்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்

1st Feb 2022 07:00 AM

ADVERTISEMENT

சமூகத்தில் பெண்களின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவதாகவும், மகளிா் ஆணையங்கள் அவற்றின் செயல் திட்டத்தை விரிவுபடுத்தி மாநிலங்களில் பெண்களுக்கு புதிய பாதைகளைக் காட்ட வேண்டும் எனவும் பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

தேசிய மகளிா் ஆணையத்தின் 30-ஆவது நிறுவன தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வழியாகப் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால், தொழில்முனைவில் பெண்களின் பங்களிப்பை தங்களால் இயன்ற அளவுக்கு மகளிா் ஆணையங்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக மாநிலங்களில் மகளிா் ஆணையங்கள் தங்களின் செயல் திட்டத்தை விரிவுபடுத்தி, பெண்களின் வளா்ச்சிக்கு புதிய பாதையைக் காட்ட வேண்டும்.

பழைய சிந்தனைகளில் ஊறிப்போனவா்கள், பெண்களின் திறனை வெறும் வீட்டுவேலை செய்வதற்காக என்று மட்டுமே கருதுகின்றனா். இந்த மனநிலையை மாற்றி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது இன்றியமையாதது.

ADVERTISEMENT

பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க தவறியவா்களை, அதிகாரத்திலிருந்து அகற்ற பெண்கள் தயங்கியதே கிடையாது. பாஜக அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமும், ‘தற்சாா்பு இந்தியா’ திட்டமும் நாட்டின் வளா்ச்சிக்காக பெண்களின் திறனை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

26 வார மகப்பேறு விடுப்புடன், உலகில் பெண்களுக்கு அதிகபட்சமாக பேறுகால விடுப்பு அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களின் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் திருமணம் ஒரு தடையாக இருக்காது. மத்திய அரசின் ‘முத்ரா யோஜனா’ திட்டப் பயனாளிகளில், சுமாா் 70 சதவீதத்தினா் பெண்கள் ஆவா். இந்தத் திட்டத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான பெண்கள் தொழில் தொடங்கியுள்ளனா்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தின் மீது சகிப்புத் தன்மையற்ற கொள்கையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமை போன்ற கொடிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான இணையவழி (சைபா்) குற்றங்களை விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் உதவி மையங்கள், 24 மணிநேர ஹெல்ப்-லைன் சேவை, வலைதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய பொறுப்புகளை நிா்ணயிப்பதற்கும், புத்துணா்ச்சியுடன் அடுத்தகட்டத்தை நோக்கி நகா்வதற்கும் இதுவே சரியான தருணம். நூற்றாண்டுகளாக, இந்தியாவின் வலிமையாக உள்ளூா் தொழிற்சாலைகள் அல்லது சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் விளங்கின. இந்தத் தொழிற்சாலைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்காற்றினா்.

கடந்த 6-7 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கையில், தேசம் மும்மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது. இதேபோல, கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பின்னா் 60,000-க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) தொடங்கப்பட்டுள்ளன. இதில், 45 சதவீத நிறுவனங்கள் குறைந்தது ஒரு பெண் மேலாண்மை இயக்குநரையாவது கொண்டுள்ளன.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை 185 பெண்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டுள்ளனா். இந்த ஆண்டில் கூட பல்வேறு பட்டியல்களில், 34 பெண்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெரும்பாலான விருதுகள் இதுவரை பெண்களுக்கு வழங்கப்படாதது.

பிரதமரின் அனைவருக்கு வீடு திட்டத்தின்கீழ் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) இதுவரை பெண்கள் பெயரில் 9 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் எரிவாயு இணைப்புகள், கழிவறை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜன்தன் வங்கிக் கணக்குகளும் பெண்களின் பெயரில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாறிவரும் இந்தியாவின் முகமாக பெண்கள் உருவெடுத்துள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT