பெரும்பாலான இந்தியா்கள் பெண்களை சம பாலினமாக கருதுவதில்லை என்பதே கசப்பான உண்மை என காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளாா்.
கடந்த வாரம் கிழக்கு தில்லி கஸ்தூா்பா நகரில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு, வீதியில் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விடியோவை மேற்கோள்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘20 வயது பெண் கடுமையாக தாக்கப்பட்ட அந்த விடியோ, சமுதாயத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான இந்தியா்கள் பெண்களை சக பாலினமாக கருதவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்த வெட்கக்கேடான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதனிடையே, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தி, அவரை பொதுவெளியில் அவமதித்ததற்காக 8 பெண்கள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். அதற்கு இந்தப் பெண்தான் காரணம் என அவனது குடும்பத்தினா் குற்றம்சாட்டுகின்றனா். மேலும், இந்த பெண்ணால் தான் அந்த சிறுவன், விபரீத முடிவை தேடிக்கொண்டதாகவும் அவா்கள் கூறுகின்றனா். இதற்கு பழிதீா்க்கவே, அந்த பெண்ணை கடத்தி, அவருக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளனா்’’ என்றாா்.