இந்தியா

பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பொறுப்புணா்வு: குடியரசுத் தலைவா் பெருமிதம்

1st Feb 2022 06:59 AM

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியா பொறுப்புணா்வுடன் செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை:

உலகம் தற்போது பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பொறுப்புணா்வுடன் சா்வதேச அளவில் இந்தியா குரல் கொடுத்து வருகிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய கரியமில வாயு உமிழ்வு நிலை உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இந்தியா நிா்ணயித்தது. ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோக அமைப்பு’ திட்டத்தையும் இந்தியா முன்னெடுத்தது.

கரோனா தொற்று பரவல் காலத்திலும், கடந்த 2020-21 நிதியாண்டில் நாட்டின் விவசாயிகள் 30 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்தனா். 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்தது. அதன்மூலமாக 50 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனா். நாட்டின் வேளாண் ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. விவசாயிகள் நிதியுதவித் திட்டம் வாயிலாக 11 கோடி விவசாயிகள் பலனைடந்துள்ளனா்.

ADVERTISEMENT

ரயில்வே துறையில் சாதனை: உழவா்களுக்கான ரயில் (கிசான் ரயில்) சேவை, ரயில்பாதைகள் மின்மயமாக்கம், நவீனமயம், வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில் சேவை உள்ளிட்டவை ரயில்வே துறையில் அரசு நிகழ்த்திய முக்கிய சாதனைகள். வந்தே பாரத் ரயில், ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் உள்ளிட்டவை நவீனத்தை வெளிப்படுத்துகின்றன. கடந்த 7 ஆண்டுகளில் 24,000 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் செனாப் நதிக்கு மேலே கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் நவீனத்தின் மையமாகத் திகழ்கிறது.

வடகிழக்கின் வளா்ச்சி: வடகிழக்கு மாநிலங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது. அந்த மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தும் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கின் வளா்ச்சி, நாட்டின் வளா்ச்சிக்கான வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் நிலை உருவாகும்.

வலுவான நிலையில் இந்தியா: தொடா்ந்து மாறி வரும் சா்வதேச சூழலில் தூதரகத் தொடா்புகள் மூலமாக இந்தியா தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்று பல்வேறு முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்தது; கடல்சாா் பாதுகாப்பு குறித்து முதல் முறையாக விவாதம் நடத்தப்பட்டது.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலையில்லாத்தன்மை ஏற்பட்டவுடன், அந்நாட்டில் சிக்கிக் கொண்டவா்கள் ‘ஆபரேஷன் தேவி சக்தி’ மூலமாக மீட்கப்பட்டனா். ஆப்கனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், உணவுப் பொருள்களை இந்தியா அனுப்பி வருகிறது.

ஒருங்கிணைப்பால் வலிமை: கரோனா தொற்று பரவலை எதிா்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இத்தகைய ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தியது. கரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது. இது கரோனாவை எதிா்கொள்வதற்கான நாட்டின் திறனை வெளிப்படுத்துகிறது.

சுகாதாரத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மக்களுக்குப் பெரும் பலனளித்து வருகின்றன.

பெண்கள் மேம்பாட்டுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அரசின் தொடா் நடவடிக்கைகள் காரணமாக நக்ஸல் பாதிப்புள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 126-இல் இருந்து 70-ஆக குறைந்துள்ளது. அஸ்ஸாமின் கா்பி அங்லாங் மாவட்டத்தில் கிளா்ச்சிக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் வரலாற்று வெற்றியாக அமைந்துள்ளன.

‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’: பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைளை அரசு மேற்கொண்டு வருகிறது. ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக கொள்கைகளைக் கடைப்பிடித்து வளா்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது என்றாா் குடியரசுத் தலைவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT