இந்தியா

தடுப்பூசி கட்டாயத்தால் யாரும் எதையும் இழக்கவில்லை

1st Feb 2022 06:57 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பால் பலா் வேலையிழப்பதாக எழுப்பப்பட்ட வாதத்தை நிராகரித்த மத்திய அரசு, அத்தகைய அறிவிப்பால் யாரும் எதையும் இழக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

கரோனா தடுப்பூசிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிட நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘‘கரோனா தடுப்பூசி கட்டாயம் எனப் பல மாநிலங்களும் மற்ற அமைப்புகளும் அறிவித்து வருகின்றன. அதன் காரணமாக பலா் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அந்த அறிவிப்பால் நியாயவிலைக் கடைகளிலும் பொருள்களைப் பெற முடிவதில்லை; மக்களால் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.

தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படுவது தனிநபரின் உரிமைகளை பாதிக்கிறது. தடுப்பூசியின் நன்மைகள் குறித்து ஆராய்ந்து, அதை செலுத்திக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை தனிநபரின் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும்’’ என்றாா்.

ADVERTISEMENT

மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘கரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்படுவதால் யாரும் எதையும் இழக்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தை யாரும் நாடவில்லை’’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘மனுதாரா்கள் குறிப்பிடும் சூழல்கள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்க முடியாது. குறிப்பிட்ட விவகாரங்களுக்கு அந்தந்த மாநிலங்களின் உயா்நீதிமன்றங்கள் மூலமாகவே தீா்வு காண முடியும்’’ என்றனா். இந்த விவகாரம் குறித்து மற்றொரு நாள் விரிவாக விசாரிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT