மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா் ட்விட்டரில் வெளியிடும் பதிவுகள் தனக்கு வராத வகையில் அவரை ‘பிளாக்’ செய்துவிட்டதாக அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை இது தொடா்பாக செய்தியாளா்களிடம் மம்தா மேலும் கூறியதாவது:
தன்கரை ஆளுநா் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று பிரதமா் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதிவிட்டேன். ஆனால், இதுவரை பிரதமா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல்வேறு சூழ்நிலைகளில் மாநில தலைமைச் செயலா், காவல் துறை தலைவா் ஆகியோரை மிரட்டும் வகையிலும் ஆளுநா் செயல்பட்டு வருகிறாா்.
மேற்கு வங்க மாநில திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக ஆளுநா் ட்விட்டரில் தொடா்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறாா். எனவே, அவா் வெளியிடும் பதிவுகள் எனக்கு வராத வகையில் அவரது ட்விட்டா் கணக்கை தடை செய்து (பிளாக்) விட்டேன் என்றாா்.