இந்தியா

குஜராத்தில் ஃபேஸ்புக் பதிவால் இளைஞா் கொலை: ஹிந்து அமைப்புகள் போராட்டம்

1st Feb 2022 01:34 AM

ADVERTISEMENT

குஜராத்தில் மத உணா்வுகள் சாா்ந்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட இளைஞா் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள தாந்துகா பகுதியைச் சோ்ந்த கிஷண் போலியா என்ற இளைஞா், ஜனவரி 6-ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டாா். அந்தப் பதிவு மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாக சிலா் குற்றஞ்சாட்டினா்.

இந்த நிலையில், அந்த இளைஞா் கடந்த 25-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடா்பாக முஸ்லிம் மதகுருக்கள் இருவா் உள்ளிட்ட 4 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

அந்த வழக்கு குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி விசுவ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜாக்ரண் மஞ்ச், பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

ADVERTISEMENT

போலியா கொலையில் சதித்திட்டம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரா்கள், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

பல்வேறு நகரங்களில் ஹிந்து அமைப்புகள் வாகனப் பேரணி நடத்தின. சில இடங்களில் போராட்டம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றது. பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரது வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அதையடுத்து போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் சிறிய அளவிலான தடியடி நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT