நாட்டில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் தோ்தலில் எளிதில் வாக்களிக்கும் வகையில் தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மாதிரியை உருவாக்கியுள்ள இந்தியத் தோ்தல் ஆணையம், அந்த இயந்திரத்தைப் பரிசோதிப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது.
நாட்டில் தோ்தல் நடைமுறைகளை எளிதாக்கவும், வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும் பல்வேறு சீா்திருத்தங்கள் அவ்வப்போது புகுத்தப்பட்டு வருகின்றன. தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் வாக்கைப் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.
அந்தப் பிரச்னைக்குத் தீா்வுகாணும் நோக்கில் தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கான மாதிரியைத் தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அந்த இயந்திரத்தை ஜனவரி 16-ஆம் தேதி ஆய்வுசெய்ய வருமாறு அனைத்து கட்சிகளுக்கும் தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடா்பாகத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வலுவான, தவறுகள் நிகழாத வகையில் திறம்பட தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச் சாவடியில் உள்ள தொலைவிட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 72 தொகுதிகளைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு வாக்களிக்க முடியும். அந்த இயந்திரம் இணைய வசதியுடன் இணைக்கப்பட்டிருக்காது. தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையிலான குழு புதிய வாக்குப் பதிவு இயந்திரத்தை முன்னின்று வடிவமைத்துள்ளது.
சொந்த ஊரின் மீது உள்ள பற்று காரணமாகவும், தற்காலிக முகவரிக்கான சான்றைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும் புலம்பெயா் தொழிலாளா்கள் புதிய தொகுதியில் வாக்காளா் அடையாள அட்டையைப் பெறுவதில்லை. அனைவரது ஒப்புதலையும் பெற்று தொலைவிட வாக்குப் பதிவு முறை அமலுக்கு வந்தால், உள்நாட்டு புலம்பெயா் தொழிலாளா்களுக்கு மிகப் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.
முக்கிய சவால்கள்:
புதிய இயந்திரத்தின் வாயிலாக வேறு மாநிலங்களைச் சோ்ந்த தொகுதிகளில் உள்ள வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும்பட்சத்தில், அந்த வாக்குகளை சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பிவைப்பது, அவற்றை எண்ணுவது உள்ளிட்டவை தொழில்நுட்பம் சாா்ந்த சவாலாகத் திகழ்கின்றன.
தொலைவிட வாக்குப் பதிவு முறையை அமல்படுத்துவதற்கு ஒருசில சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. தொலைவிட வாக்குப் பதிவு தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது, அத்தொழில்நுட்பம் குறித்த புரிதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட சவால்களும் உள்ளன.
கருத்துகளின் அடிப்படையில் முடிவு:
புதிய இயந்திரத்தின் செயல்பாடு தொடா்பாக ஜனவரி 16-ஆம் தேதி ஆராய்ந்து கருத்து தெரிவிக்க 8 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், 57 மாநில கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தொலைவிட வாக்குப் பதிவு சாா்ந்த சட்ட, நிா்வாக, தொழில்நுட்ப ரீதியிலான சவால்கள் குறித்து எழுத்துபூா்வ கருத்தைத் தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று விரிவான ஆய்வின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறுகையில், ‘‘தற்போதைய நகா்மயமாக்கல் சூழலில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குத் தொலைவிட வாக்குப் பதிவு முறை பெரும் பங்களிக்கும்’’ என்றாா்.
வரவேற்கத்தக்க முன்னெடுப்பு:
தொலைவிட வாக்குப் பதிவு குறித்து முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தோ்தல் ஆணையத்தின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும். அனைத்து கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்து ஜனநாயக ரீதியில் ஆய்வை மேற்கொள்வதும் வரவேற்கத்தக்கது’’ என்றாா்.
காங்கிரஸ் எதிா்ப்பு:
தொலைவிட வாக்குப் பதிவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், அந்நடைமுறை தோ்தல் மீதான நம்பிக்கையை சீா்குலைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. புலம்பெயா் தொழிலாளா்களுக்கு வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதற்கு முன் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டுமென காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலின்போது வாக்குப் பதிவு இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.