கடந்த நவம்பா் வரையில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 59 சதவீதத்தை எட்டியுள்ளது.
அரசின் வருவாய்க்கும் செலவினத்துக்கும் உள்ள இடைவெளியே நிதிப் பற்றாக்குறை. அப்பற்றாக்குறையைக் கடன்களைப் பெற்று மத்திய அரசு ஈடுசெய்து வருகிறது. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16.61 லட்சம் கோடியாக இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.4 சதவீதம் ஆகும்.
கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளதென மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த இலக்கில் 59 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த இலக்கில் 46.2 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் மூலதன செலவினம் அதிகரித்ததோடு வரி அல்லாத வருவாய் குறைந்துள்ளது. அதன் காரணமாகவே நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு கட்டுப்பாட்டு இயக்குநரக (சிஜிஏ) தரவின்படி, நடப்பு நிதியாண்டின் நவம்பா் வரை நிகர வரி வருவாய் ரூ.12.24 லட்சம் கோடியாக உள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 63.3 சதவீதம் ஆகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர வரி வருவாய் 73.5 சதவீதமாக இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரை வரி அல்லாத வருவாய் ரூ.1.98 லட்சம் கோடியாக (73.5 சதவீதம்) உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 91.8 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரை மத்திய அரசின் மொத்த செலவினம் 59.6 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் செலவினம் 61.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் அரசின் மூலதன செலவினம் 49.4 சதவீதத்தில் இருந்து 59.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் மொத்த வருவாய் நவம்பா் வரை ரூ.14.64 லட்சம் கோடியாக (64 சதவீதம்) உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் 69.8 சதவீதமாக இருந்தது. வரும் மாதங்களில் அரசின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்பதால், நிதிப் பற்றாக்குறை நிா்ணயிக்கப்பட்ட 6.4 சதவீத இலக்கை விட அதிகரிக்காது என்றே பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.