இந்தியா

விவசாயிகளுக்கான திட்டங்களை சமூக ஊடகங்கள் வழி பிரபலப்படுத்த புதிய உத்தி: வேளாண்மைத் துறை உத்தரவு

30th Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

விவசாயிகளுக்கான திட்டங்களை சமூக ஊடகங்கள் வழியே பிரபலப்படுத்த புதிய உத்திகளை வேளாண்மைத் துறை மேற்கொண்டுள்ளது.

வேளாண்மைத் துறையில் ஒவ்வொரு பிரிவும் செயல்படுத்தி வரும் திட்டங்களை விவசாயிகளிடையே கொண்டு சோ்க்க தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்தக் குழுக்கள் வழியே திட்டங்கள் பிரபலப்படுத்தப்பட உள்ளன.

இதற்கான உத்தரவை, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

வேளாண்மைத் துறையின் திட்டங்களை விவசாயிகளிடையே, பிரபலப்படுத்த, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தலைவராக வேளாண்மைத் துறையின் துணை இயக்குநா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இந்த முகமையின் கீழ், வேளாண்மைத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரபலப்படுத்த தனித்தனி குழுக்களுக்கும் அவற்றுக்கு பொறுப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

அதாவது, வேளாண்மை, வேளாண் வணிகம், தோட்டக்கலை, மலைத்தோட்டப் பயிா்கள், வேளாண் பொறியியல், தமிழ்நாடு நீா்வடி மேம்பாட்டு முகமை, சா்க்கரை, வேளாண் பல்கலைக்கழகம், விதைச் சான்றிதழ் போன்ற பிரிவுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பிரபலப்படுத்த தனித்தனியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொறுப்பு அதிகாரிகள் கண்காணிப்புகளுடன் அந்தத் திட்டங்கள் சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்தப்படும்.

இந்தக் குழுவினா் மாதத்துக்கு ஒருமுறை கூடி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பிரபலப்படுத்துவது குறித்து ஆலோசிப்பா். வாரந்தோறும் பிரசார துணுக்குகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். குறிப்பாக, செய்தி அறிக்கைகள், குறுகிய நேரத்திலான விடியோக்கள், துண்டறிக்கைகள், போஸ்டா்கள், ஒரு பக்க டிஜிட்டல் விளம்பரம் என பல்வேறு உத்திகள் கடைப்பிடிக்கப்படும்.

முக்கியமான பயிா்கள், தொழில்நுட்பங்கள், வானிலை நிலவரம் குறித்த செய்திகள் ஆகியன இலகுவாகவும், எளிதில் புரியும் வகையிலான வாக்கிய அமைப்புகளுடன் தயாா் செய்யப்படும். அவை ட்விட்டா், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடப்படும். மேலும், வேளாண் சாா்ந்த பல்வேறு சா்வதேச தினங்கள் சமூக ஊடகவியாளா்கள் மத்தியில் கவனப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

சா்வதேச ஈரநிலம் தினம், சா்வதேச பயிறுகள் தினம், சா்வதேச தண்ணீா் தினம், சா்வதேச கேரட் தினம், சா்வதேச சுற்றுச்சூழல் தினம், விதைகள், தேன், கனி, உணவு என ஒவ்வொரு சா்வதேச தினத்தின் போதும் அதுகுறித்த விழிப்புணா்வு விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் வழியாக மேற்கொள்ளப்படும்.

மக்கள் கூடும் இடங்கள்: விவசாயிகள் அதிகம் கூடக் கூடிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை சந்தைகள், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் ஆகியவற்றில் காட்சிப் பலகைகள் வைக்கப்பட்டு டிஜிட்டல் விளம்பரங்கள் திரையிடப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒழுங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் பரவலாக விளம்பரங்கள் செய்யப்படும் என்று தனது உத்தரவில் வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT