ஜனவரி 4-ஆம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொள்ள பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியா்கள் சங்கத்தின் ஒரு பிரிவினா் அழைப்பு விடுத்துள்ளனா். காப்பீட்டு நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் அரசின் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட இருக்கிறது.
பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இது தொடா்பாக கூறியுள்ளதாவது:
காப்பீட்டு நிறுவனங்களின் மறுசீரமைப்பு என்ற பெயரில் இப்போது உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காப்பீட்டு நிறுவனங்களை பலவீனமாக்கும் செயலாகும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவன கிளை அலுவலகங்களை மூடுவது, இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதில் லாபத்தில் செயல்படும் கிளைகளும் அடங்கும். ஏற்கெனவே இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட பொதுத் துறை காப்பீட்டு நிறுவன கிளை அலுவலகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால், பாலிசிதாரா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தனியாா் நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்ற உதவுவதாகவும் அமைகிறது.
பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் தொடா்பாக அரசு எடுக்கும் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களைச் சோ்ந்த 50,000-க்கும் மேற்பட்ட ஊழியா்களும் அதிகாரிகளும் ஜனவரி 4-ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா் என்று கூறப்பட்டுள்ளது.