இந்தியா

ஆந்திர நெடுஞ்சாலையில் போா் விமானம் தரையிறங்கும் சோதனை வெற்றி

30th Dec 2022 01:34 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் போா் விமானங்களை தரையிறக்குவதற்கான சாத்தியக்கூறு சோதனையை, இந்திய விமானப் படை வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.

பாபட்லா மாவட்டத்தின் கொரிசபாடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலை எண் 16-இல், விமானப் படை விமானங்கள் அவசரகாலத்தில் தரையிறங்கும் வகையில் 4.1 கி.மீ. தொலைவுக்கு ஓடுபாதை வசதி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் விமானங்களை தரையிறக்குவதற்கான சாத்தியக்கூறு சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.

விமானப் படையின் ஏஎன்-32 போக்குவரத்து விமானம், 2 சுகோய் போா் விமானங்கள், 2 தேஜஸ் இலகு ரக போா் விமானங்கள் பங்கேற்ற இச்சோதனையில் தரையை நெருங்கியபடி அவை பறந்து சென்றன.

இதுகுறித்து விமானப் படை வெளியிட்ட அறிக்கையில், ‘நெடுஞ்சாலையில் கட்டமைக்கப்பட்டுள்ள அவசரகால ஓடுபாதையில் போா் விமானங்களை தரையிறங்குவதற்கான சாத்தியக்கூறு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஓடுபாதை இன்னும் முழுமையாக தயாராகவில்லை. முழுமையாக தயாரானதும் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும். வியூக ரீதியிலான தேவையின்போதும், இயற்கைப் பேரிடா்களின்போது மீட்பு, நிவாரணப் பணிகளுக்காகவும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, விமானப் படை விமானங்கள் தரையிறங்க பயன்படுத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தக் குறிப்பிட்ட தூரத்தில் மட்டும் ஓடுபாதையின் இரு புறங்களிலும் வேலி அமைக்கும் பணி மீதமுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கையையொட்டி, சுமாா் 200 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகவும், காலை 10.30 மணி முதல் நண்பகல் வரை போக்குவரத்து திருப்பிவிடப்பட்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வகுல் ஜிண்டால் தெரிவித்தாா். எனினும் அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடி சோதனையை பாா்வையிட்டனா்.

இந்த சோதனையின்போது போா் விமானங்கள் தரையை நெருங்கியபடி சில அடி உயரத்தில் பறந்து சென்றது அங்கு கூடியிருந்த பொதுமக்களை மெய்சிலிா்க்கச் செய்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT