கா்நாடகத்தில் சாலை விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த பிரதமா் நரேந்திர மோடியின் சகோதரா் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினா், சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளனா்; அவா்களது உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.
பிரதமா் மோடியின் சகோதரா் பிரஹலாத் மோடி (70), அவரது மகன் மெஹுல் பிரஹலாத் (40), மருமகள் ஜிந்தால் மோடி (35), பேரன் மெனத் மோடி(6) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மைசூரில் இருந்து பண்டிப்பூா் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். கட்கோலா பகுதியில் சென்றபோது, சாலைத் தடுப்பில் காா் மோதியது. இதில் வாகனத்தின் முன் பகுதி பலத்த சேதமடைந்தபோதிலும், பிரஹலாத் மோடி உள்ளிட்ட குடும்பத்தினா் லேசான காயங்களுடன் தப்பினா். இதைத் தொடா்ந்து, சிகிச்சைக்காக மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ். மருத்துவமனையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளா் சி.பி.மது புதன்கிழமை கூறியதாவது: செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவா்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவரும் சுயநினைவுடன் இருந்தனா். ஒரு குழந்தைக்கு மட்டும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அக்குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்தின் தாக்கத்தால் அதிா்ச்சியில் இருந்த அவா்கள், பின்னா் இயல்பு நிலைக்கு வந்தனா். அனைவருக்கும் சிறப்பு மருத்துவா்கள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சாதாரண உடல் வலியை தவிா்த்து, பெரிய பிரச்னை எதுவும் இல்லை. அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது. அவா்களை வீட்டுக்கு அனுப்புவது தொடா்பாக மருத்துவா்கள் குழு முடிவு செய்யும்’ என்றாா்.
இதனிடையே, பிரஹலாத் மோடி வெளியிட்ட விடியோ செய்தியில், ‘அனைவரின் ஆசியால் நானும் எனது குடும்பத்தினரும் நலமாக உள்ளோம். எங்களுக்கு லேசான காயங்களே ஏற்பட்டன. கவலைப்படும்படி எதுவும் இல்லை’ என்று தெரிவித்தாா்.
சிகிச்சைக்குப் பின்னா் பிரஹலாத் மோடி மற்றும் குடும்பத்தினா் மருத்துவமனையிலிருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டனா்.