உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்க்க படக்குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் குஜராத்தில் வசித்து வருகிறார். 100 வயதாகும் இவரை, குஜராத் செல்லும்போது பிரதமர் மோடி சந்தித்து புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில், புதன்கிழமை காலை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஹீராபென், குஜராத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
தனது தாயை பார்க்க நேற்றிரவு குஜராத் விரைந்த பிரதமர் மோடி, சுமார் ஒரு மணிநேரம் மருத்துவமனையில் இருந்ததால், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், தாயை பார்க்கச் சென்ற மோடியுடன் படக்குழுவினரும் மருத்துவமனைக்கு சென்ற விடியோ தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
உலகிலேயே மருத்துவமனையில் இருக்கும் தாயை பார்க்க படக்குழுவினருடன் மோடியைத் தவிர வேறு யாரும் சென்றிருக்க மாட்டார்கள் என டிவிட்டரில் விமர்சனம் எழுந்துள்ளது.
முன்னதாக, குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை பார்க்கச் சென்ற போதும் மோடி படக்குழுவினருடன் சென்று விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.