ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக, வடிநீர் கால்வாயில் விழுந்து ஒரு பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
நெல்லூர் மாவட்டத்தின் கண்டுகுர் நகரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியின்போது மாநில எதிர்க்கட்சித் தலைவரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடியதையடுத்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அருகே இருந்த வடிநீர் கால்வாயில் விழுந்ததில் ஒரு பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்த சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக அறிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவரது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.