இந்தியா

இந்திய மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு

29th Dec 2022 09:01 AM

ADVERTISEMENT

இந்திய தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலியாகியுள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன், உஸ்பெகிஸ்தான் மருத்துவமனைகளில் இருமலுக்கு மருந்து குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக 21 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அதில், 18 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளது.

இதுகுறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த மருந்தை குடித்துள்ளனர்.

2-7 நாள்கள் வரை தினமும் 3 முறை 2.5 முதல் 5 மி. வரை இந்த மருந்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கக்கூடும்.

மேலும், இந்த மருந்துகளை ஆய்வு செய்ததில், எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், உஸ்பெகிஸ்தான் முழுவதும் மருந்து விற்பனையகத்திலிருந்து டாக்-1 மேக்ஸ் மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்களை குடித்த 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக புகார் எழுந்த நிலையில், மெய்டென் மருந்தியல் நிறுவனத்தின் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT