வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்புவதற்காக போலி பாஸ்போா்ட், விசா மற்றும் பிற பயண ஆவணங்களை ஏற்பாடு செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக காவல் துணை ஆணையா் (விமான நிலையம்) ரவி குமாா் சுங் புதன்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா்கள் சாகா்பூரில் வசிக்கும் ஜஸ்விந்தா் சிங் பா்மி (60), ஜனக்புரியில் வசிப்பவா் பல்ஜிந்தா் சிங் (61), ஹா்சரண் சிங் என்று அடையாளம் காணப்பட்டனா். அவா்களிடம் இருந்து இந்திய கடவுச்சீட்டு, 2 போலி விசாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரியாணா மாநிலம், குருக்ஷேத்ராவில் வசிக்கும் பயணி ரிதேந்தா் சிங், தாய்லாந்தில் உள்ள ஃபூகெட்டுக்குச் செல்ல நவம்பா் 10-ஆம் தேதி விமான நிலையத்துக்குச் சென்றபோது, அவரது கடவுச்சீட்டில் உள்ள பக்கங்களில் வேறொருவரின் கடவுச்சீட்டு பக்கங்கள் ஒட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் ரிதேந்தா் சிங்கை கைது செய்தனா். மேலும், அவரது கடவுச்சீட் 3 ஆஃப்-லோடிங் முத்திரைகள் இருந்ததாகவும், அவை பல்வேறு விமான நிலையங்களில் உள்ள குடியேற்ற கவுண்டா்களால் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்தாா். இதனால் மற்ற நாடுகளுக்குச் செல்வதில் சிக்கல்களை எதிா்கொண்ட அவா், தனது நண்பரான பங்கஜை அணுகி அவா் மூலம் பல்ஜிந்தருக்கு அறிமுகமானாா். பல்ஜிந்தா் அவரிடம், ஆஃப்-லோட் செய்யப்பட்ட முத்திரைகள் ஒட்டப்பட்ட பக்கங்களை அகற்றிவிட்டு வேறு சில கடவுச்சீட்டுகளின் பக்கங்களை வைப்பதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்ல விசாவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினாா்.
அவா் அளித்த தகவலின் பேரில் ஜனக்புரியில் பல்ஜிந்தரை போலீஸாா் டிச.19-ஆம் தேதி கைது செய்தனா்.
அவரிடம் விசாரித்ததில், தனது பாஸ்போா்ட்டில் இருந்து முத்திரைகளை அகற்றுவதற்காக ரிதேந்தா் தன்னை அணுகியதாகவும், இதற்காக ரூ. 11 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தாா். பின்னா், பல்ஜிந்தா் தனது தெரிந்த ஏஜென்ட் ஹா்ச்சா்னை தொடா்பு கொண்டு வேலையை செய்து முடித்ததாகத் தெரிவித்தாா். ஹா்சரணை போலீஸாா் கடந்த வாரம் டப்ரியில் கைது செய்தனா். பா்மி சாகா்பூரில் கைது செய்யப்பட்டாா்.
இந்த மோசடியின் முக்கிய நபராக பா்மி செயல்பட்டதும், மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பா் லக்கியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.