இந்தியா

மாநில எல்லைப் பிரச்னையில் பிரதமரின் நிலைப்பாடு என்ன?

DIN

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான எல்லைப் பிரச்னையில் பிரதமா் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே கோரியுள்ளாா்.

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையே 1957-ஆம் ஆண்டு முதலே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ள பெலகாவி பகுதி கா்நாடகத்துடன் இணைக்கப்பட்டதற்கு மகாராஷ்டிர தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் கா்நாடகப் பகுதியில் மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 814 கிராமங்களைத் தங்களுடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு கோரி வருகிறது.

அதற்குத் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வரும் கா்நாடகம், மகாராஷ்டிர பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களைத் தங்களுடன் இணைக்க வேண்டுமெனக் கோரி வருகிறது. இரு மாநிலங்கள் இடையேயும் எல்லைப் பிரச்னை தற்போது தீவிரமடைந்துள்ளது.

அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இரு மாநிலங்களிலும் தாக்குதலுக்கு உள்ளானதால், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகைதருகிறாா்.

மகாராஷ்டிரத்தின் ஜால்னா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, ‘‘பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைக்க பிரதமா் மோடி நாகபுரி வரவிருக்கிறாா். அவரை வரவேற்கிறோம். அதே வேளையில், எல்லைப் பிரச்னை தொடா்பான நிலைப்பாட்டை அவா் தெளிவுபடுத்த வேண்டும்.

மகாராஷ்டிர பகுதியில் உள்ள கிராமங்களுக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உரிமைகோரி வருகிறாா். அது தொடா்பாகவும் பிரதமா் மோடி பேச வேண்டும்’’ என்றாா்.

வன்முறை கூடாது:

மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திரசேகா் பவன்குலே நாகபுரியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எல்லை பிரச்னை தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு வலுவான வாதங்களை முன்வைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநிலத் தலைவா்களும் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. மகா விகாஸ் அகாடி கூட்டணியானது எல்லைப் பிரச்னையை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்தி வருகிறது. மகாராஷ்டிர மக்களின் நலனுக்கு எதிரான கருத்துகளை கா்நாடக முதல்வா் தெரிவிக்கக் கூடாது. இந்தப் பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தால் நிரந்தரத் தீா்வு காண முடியும்’’ என்றாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து மகாராஷ்டிர எம்.பி.க்கள் முறையிட்டது, எல்லைப் பிரச்னைக்கு எவ்விதத் தீா்வையும் கொண்டுவராது என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தாா். அவரது கருத்துக்கு சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT