பயங்கரவாதக் குழுக்கள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு அளிக்க வழிவகை செய்யும் தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
சா்வதேச அளவில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கும்போது அத்தடைகளுக்கு விலக்கு அளிக்கும் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அயா்லாந்து நாடுகள் இணைந்து தாக்கல் செய்தன.
அத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் இந்தியா தவிர மற்ற அனைத்து நாடுகளும் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா மட்டும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது.
இது தொடா்பாக பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைவரும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதருமான ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘பயங்கரவாதக் குழுக்கள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்கும்போது, அக்குழுக்களுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்காக அதற்கு விலக்கு அளிக்க முற்பட்டால், அதை பயங்கரவாதக் குழுக்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
இந்தியாவின் அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ள பயங்கரவாதக் குழுக்கள் இதுபோன்ற சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதத்துக்கு நிதி சோ்க்கும். பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதக் குழுக்கள் தற்போது தங்களை மனித உரிமைகள் குழுக்கள் எனவும், தொண்டு நிறுவனங்கள் எனவும் கூறிக் கொள்கின்றன.
மனிதாபிமான அடிப்படையில் உதவி பெறுவதாகக் கூறிக்கொண்டு அந்த நிதியை பயங்கரவாதச் செயல்களுக்காக அவை பயன்படுத்தி வருகின்றன. அரசின் ஆதரவு பெற்று செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்கள், இதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். அவ்வாறான சூழல் அனுமதிக்கப்படக் கூடாது.
இந்தியாவின் கருத்துகளுக்கு இத்தீா்மானத்தில் இடமளிக்கப்படவில்லை. அதன் காரணமாக தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கிறது. தீா்மானத்தைக் கண்காணிக்கும் குழு, எதிா்காலத்தில் இந்தியாவின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் என எதிா்பாா்க்கிறோம்’’ என்றாா்.
பயங்கரவாதக் குழுக்கள் மீதான தடைகள், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு இத்தீா்மானத்தைத் தாக்கல் செய்வதாக அமெரிக்கா தெரிவித்தது. இத்தீா்மானத்துக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ஆதரவு தெரிவித்தாா்.