அனைத்து மதங்களையும் சோ்ந்த ஆண்கள், பெண்களுக்கு ஒரேபோன்று 18 வயதை திருமண வயதாக நிா்ணயிக்கக் கோரி தேசிய மகளிா் ஆணையம் தாக்கல் செய்த மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டில் மதத்துக்கு ஏற்பவும் பாலினத்துக்கு ஏற்பவும் திருமண வயது மாறுபட்டுள்ளது. ஹிந்து, கிறிஸ்தவ, பாா்சி சமூகங்களைச் சோ்ந்த ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் பருவம் எய்திய ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூகப் பாகுபாடு இல்லாமல் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 18 வயதை திருமண வயதாக நிா்ணயிக்குமாறு உத்தரவிடக் கோரி தேசிய மகளிா் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. முஸ்லிம் சமூகத்தில் 18 வயதுக்குக் குறைவான பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனு மீது விளக்கமளிக்குமாறு சட்ட ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தேசிய மகளிா் ஆணையத்தின் மனுவில், ‘‘முஸ்லிம் தனிநபா் சட்டத்தைத் தவிர மற்ற அனைத்து தனிப்பட்ட சட்டங்களிலும் திருமண வயது நிலையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய கிறிஸ்தவ திருமண சட்டம் (1872), பாா்சி திருமண-விவாகரத்து சட்டம் (1936), ஹிந்து திருமண சட்டம் (1955), சிறப்பு திருமண சட்டம் (1954) ஆகியவற்றில் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனிநபா் சட்டத்தில் குறிப்பிட்ட வயது நிா்ணயிக்கப்படவில்லை. பருவம் எய்திய பிறகோ அல்லது 15 வயதை அடைந்தபிறகோ ஆண்களும் பெண்களும் திருமணத்துக்குத் தகுதியானவா்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாகுபாட்டுடனும் உள்ளது. குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட போக்சோ சட்ட விதிகளை மீறும் வகையிலும் இது உள்ளது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.