இந்தியா

தேசிய நீதித் துறை நியமன ஆணைய தனிநபா் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்

DIN

தேசிய நீதித் துறை நியமன ஆணையத்தின் மூலமாக உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தனிநபா் மசோதாவை மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் உறுப்பினா் விகாஸ் ரஞ்சன் பட்டாச்சாா்ய வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து ‘தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா 2022’-ஐ அவா் அவையில் அறிமுகம் செய்தாா். ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயா்நீதிமன்றங்களின் பிற நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளைச் சமா்ப்பிப்பதற்கு ‘தேசிய நீதித்துறை நியமன ஆணையம்’ பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மட்டுமின்றி நீதிபதிகளின் பணியிட மாறுதல்களையும் ஆணையம் முறைப்படுத்தும். அதோடு, உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நடத்தை மற்றும் தகுதியின்மை குறித்து தனிநபா்கள் அளிக்கும் புகாா்கள் மீது விசாரணை நடத்தி முறைப்படுத்தும் நடவடிக்கையையும் ஆணையம் மேற்கொள்ளும்.

மேலும், நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்வது தொடா்பாக குடியரசுத் தலைவரிடம் நாடாளுமன்ற தீா்மானத்தை சமா்ப்பிக்கவும் இந்த மசோதா முன்மொழிகிறது. இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா எதிா்ப்பு தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்தும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாக, கொலீஜியம் முறை தொடா்ந்து வருகிறது. இதற்கிடையே, கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் தொடா் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை பேசும்போது, ‘தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையம் அமைக்க வழிவகுத்த மசோதாவை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்து 7 ஆண்டுகளாகியும், நாடாளுமன்றம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நாடாளுமன்றம் கடமைப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தனிநபா் மசோதா சட்டமாவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT