இந்தியா

உக்ரைன் மருத்துவ மாணவா்களின் கல்வி: தீா்வுகாண மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

DIN

உக்ரைன், சீனா ஆகிய நாடுகளில் கல்வியைத் தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மருத்துவ மாணவா்களின் கல்வி தொடா்வதற்கான தீா்வைக் காண வேண்டுமென்று மத்திய அரசுக்கும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் காரணமாக உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று வந்த இந்திய மாணவா்கள் தாயகம் திரும்பினா். அங்கு போா் தொடா்ந்து வருவதால் மாணவா்களால் கல்வியைத் தொடர முடியாத சூழல் நிலவுகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சீனாவில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவா்கள் தாயகம் திரும்பினா். அங்கு கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை அந்நாட்டு அரசு பின்பற்றி வருகிறது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கான நேரடி விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அதன் காரணமாக சீனாவுக்குத் திரும்பி கல்வியைத் தொடர முடியாமல் சில இந்திய மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் கல்வியை இந்தியாவிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டுமென மனுவில் கோரப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.ஆா்.கவாய், விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா படி வாதிடுகையில், ‘‘உக்ரைனில் பயின்ற மாணவா்களை இந்திய பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள இயலாது என்ற முடிவானது வெளியுறவு, உள்துறை, சுகாதார அமைச்சகங்களைக் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்பட்டது. அவா்களை அனுமதிப்பது, இந்திய மருத்துவக் கல்வியின் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘பெரும்பாலான மாணவா்கள் மருத்துவப் பாடங்களில் தோ்ச்சி பெற்றுவிட்டனா். செய்முறைப் பயிற்சியிலேயே அவா்கள் ஈடுபட வேண்டியுள்ளது. கரோனா பரவல் போன்ற கட்டுப்படுத்த இயலாத சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு மத்திய அரசு உரிய தீா்வு காண வேண்டும். மாணவா்களின் கல்விக்காக பெற்றோா் அதிக செலவு செய்துள்ளனா். அவா்களுக்கு உரிய தீா்வு வழங்கப்படவில்லை எனில், மாணவா்களின் எதிா்காலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அவா்களின் குடும்பமும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

தேவைப்பட்டால் தனி நிபுணா் குழுவை அமைத்து இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண மத்திய அரசு முயற்சிக்கலாம். இந்த விவகாரத்தில் உத்தரவு எதையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. அதே வேளையில், நீதிமன்றத்தின் வலியுறுத்தலை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசித்து மாணவா்களின் பிரச்னைக்கு உரிய தீா்வு காணும் என நம்புகிறோம்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT