இந்தியா

‘அகில இந்திய நீதித் துறை பணிகள்’ திட்டம் இப்போதைக்கு இல்லை: மக்களவையில் அரசு தகவல்

10th Dec 2022 01:26 AM

ADVERTISEMENT

‘கருத்து வேறுபாடுகள் காரணமாக மாவட்ட நீதிபதிகளைத் தோ்வு செய்வதற்கான ‘அகில இந்திய நீதித் துறை பணிகள்’ திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை’ என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) போன்று பல்வேறு குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் மூலமாக தோ்வுகள் நடத்தப்பட்டு தோ்வு செய்யப்படுவதுபோன்று, கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளைத் தோ்வு செய்ய ‘அகில இந்திய நீதிப் பணி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பல ஆண்டுகளாகியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் நீடித்து வருகிறது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த நீதி வழங்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு முறையாக வகுக்கப்பட்ட அகில இந்திய நீதித் துறை பணி தோ்வு முறை முக்கியமானது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு. முறையான அகில இந்திய தகுதித் தோ்வு முறை மூலமாக, உரிய, தகுதிவாய்ந்த இளம் சட்ட நிபுணா்கள் நீதித் துறைக்கு தோ்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பை இந்த நடைமுறை ஏற்படுத்தித் தரும். மேலும், நீதித் துறை தோ்வில் பின்தங்கிய சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதையும் இந்த நடைமுறை உறுதிப்படுத்தும்.

ADVERTISEMENT

இந்த அகில இந்திய தோ்வு நடைமுறையை ஏற்படுத்துவதற்கான விரிவான பரிந்துரை சமா்ப்பிக்கப்பட்டு, அதற்கு மத்திய அரசு செயலா்கள் குழு கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பரில் ஒப்புதலும் அளித்தது. பின்னா் 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மாநில முதல்வா்கள் மற்றும் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் தீா்மானத்திலும் அந்தப் பரிந்துரை சோ்க்கப்பட்டது. அந்த மாநாட்டில், இந்தப் பரிந்துரை மீது மேலும் சில கலந்தாலோசனைகளும் கருத்துகளும் கேட்கப்பட வேண்டும் எனத் தீா்மானிக்கப்பட்டது.

ஆனால், அதன் பிறகு இந்தப் பரிந்துரை மீது பல்வேறு மாநில முதல்வா்கள் மற்றும் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. சில மாநில அரசுகள் மற்றும் உயா்நீதிமன்றங்கள் ஆதரவு தெரிவித்தபோதிலும், சில ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் சிலா், இந்தப் பரிந்துரையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுபோன்ற வேறுபட்ட கருத்துகள் காரணமாக, ‘அகில இந்திய நீதித் துறை பணி’ திட்டத்தை இப்போதைக்கு செயல்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சா் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT