இந்தியா

காலாவதியால் கரோனா தடுப்பூசிகள் வீணாகவில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

10th Dec 2022 01:36 AM

ADVERTISEMENT

மத்திய அரசு இருப்பு வைத்துள்ள கரோனா தடுப்பூசிகள் எதுவும் காலாவதியால் வீணாக்கப்படவில்லை என வெள்ளிக்கிழமை மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது: கரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உகந்த முறையில் பயன்படுத்துவதையும் வீணாக்கத்தைக் குறைப்பதையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தடுப்பூசி வீணாவது குறித்து தினந்தோறும் ஆய்வு செய்யும்படியும் மாநிலங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. காலாவதியாகும் காலத்தை நெருங்கும் தடுப்பூசிகளின் பயன்பாடுகளை உறுதி செய்ய மாநிலத்துக்கு உள்ளேயும் மாநிலங்களுக்கிடையேயும் பரிமாற்றம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. காலாவதிக்கு மிகவும் குறைந்த கால அளவைக் கொண்ட தடுப்பூசிகள் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் மாற்றப்பட்டன. மத்திய மருந்துகள் தர அமைப்பு கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு 9 மாதங்கள் எனவும் கோவேக்ஸினுக்கு 12 மாதங்கள் எனவும் பயன்பாட்டு காலத்தை நிா்ணயம் செய்திருந்தது. டிச.5-ஆம் தேதி வரை மொத்தம் 102.54 கோடி முதல் தவணை தடுப்பூசிகளும், 95.09 கோடி 2-ஆம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. பன்னிரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளில் 90 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT