யூடியூப் தளத்தில் ஆபாச விளம்பரம் காட்டியதால் மனத்தடுமாற்றம் ஏற்பட்டு தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் செளத்ரி என்பவர் அம்மாநில காவல்துறை தேர்வுக்கு தயாராகி வருகிறார். தேர்விற்காக தயாராகி வந்த செளத்ரி யூடியூப்பில் விடியோ பார்த்த போது அதில் ஆபாச விளம்பரம் வெளியானதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கம்! - எலான் மஸ்க் ட்வீட்
இதனை எதிர்த்து ஆபாச விளம்பரத்தால் தனக்கு மனத்தடுமாற்றம் ஏற்பட்டு காவலர் தேர்வில் சரியாக தேர்வெழுதி தேர்ச்சி பெற முடியாமல் போனதாகக் கூறி ரூ.75 லட்சம் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடந்தார்.
இது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது முற்றிலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி கண்டித்தனர். யூடியூப்பில் எத்தகைய விளம்பரங்கள், விடியோக்கள் தெரிய வேண்டும் என்பதை பயனரே தேர்வு செய்துகொள்ள முடியும். அப்படியிருக்க ரூ.75 லட்சம் இழப்பீடு கோரியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து நீதிபதிகள் மனுதாரரை கடுமையாக கண்டித்தனர்.
இதையும் படிக்க | 'உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் தீர்வு காணுங்கள்'
மேலும் தேர்வில் வெற்றி பெற முடியாததற்கு யூடியூப் காரணம் என தெரிவித்துள்ள மனுதாரர் தேர்வின்போது எதற்காக யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார் எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகத் தெரிவித்த நீதிபதிகள் செளத்ரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு யூடியூப் விளம்பரமே காரணம் எனக் கூறி வழக்கு தொடுத்த இளைஞரின் செயலை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.