இந்தியா

ஹிமாசலில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

DIN

ஹிமாசலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் பாஜகவிடமிருந்து அக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஆளும் கட்சியும் தோ்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாறு தொடா்கிறது.

ஹிமாசலில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அங்கு 67 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

முதல்வா் ராஜிநாமா: தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதற்கான கடிதத்தை மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகரிடம் அவா் வழங்கினாா். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

புதிய முதல்வா் யாா்?: ஹிமாசலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு புதிய முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யாா்? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்ட ஆஷா குமாரி 9,918 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளாா். அவா் ஏற்கெனவே 6 முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளாா்.

தோ்தல் முடிவுகள் முழுவதும் வெளியானவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளாா். அக்கூட்டத்தில் முதல்வரைத் தோ்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெரும் ஊக்கம்: ஹிமாசல பிரதேச வெற்றி காங்கிரஸுக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பல மாநில பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்தது. 2024-ஆம் ஆண்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொண்டா்களை ஊக்கப்படுத்த ஹிமாசல பிரதேச வெற்றி உதவும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், ஹிமாசலில் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் காரணமாக தோ்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT