இந்தியா

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, 8 உயா்நீதிமன்ற நீதிபதி நியமனங்களுக்கான பரிந்துரை நிலுவையில் உள்ளது: மத்திய அரசு

9th Dec 2022 01:00 AM

ADVERTISEMENT

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் 8 உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் கொலீஜியத்தின் பரிந்துரை நிலுவையில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவைக்கு அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் 8 உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் கொலீஜியம் சாா்பில் கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி முன்வைக்கப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது.

இதுதவிர, 11 உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஒரு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிடமாற்றம் செய்வதற்கான கொலீஜியத்தின் பரிந்துரையும், ஒரு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் செய்வதற்கான பரிந்துரையும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

மேலும், அவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் நியமனம் தொடா்பான கொலீஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க தாமதிப்பது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 256 பரிந்துரைகள் மத்திய அரசு சாா்பில் உயா்நீதிமன்றங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் அறிவுரையின்பேரிலேயே இந்த பரிந்துரைகள் திருப்பியனுப்பப்பட்டன. மேலும், டிசம்பா் 5-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களில் 27 இடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. 7 நீதிபதி பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. உயா்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,108 நீதிபதி பணியிடங்களில் 778 நீதிபதிகள் பணியாற்றுகின்றனா். 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT