இந்தியா

கடைக்கோடி மனிதருக்கும் உணவு தானியங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்

DIN

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி (என்எஃப்எஸ்ஏ) இந்தியாவின் கடைக்கோடி மனிதருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இ-ஷ்ரம் இணையதள பக்கத்தில் பதிவு செய்த புலம்பெயா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

கரோனா தொற்று, அதனைத்தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயா் தொழிலாளா்கள் எதிா்கொண்ட இன்னல் குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா். ஷா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சமூக ஆா்வலா்கள் 3 போ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘ 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாட்டின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. எனவே, உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிக அளவிலான பயனாளிகளும் அதிகரித்துள்ளனா். இச்சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், தகுதியான பல பயனாளிகள் விடுபட நேரிடும். மக்களின் தனிநபா் வருமானம் அதிகரித்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், உலகப் பட்டினி குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது’ எனத் தெரிவித்தாா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ வாதிடுகையில், ‘முன்னெப்போதும் இல்லாத வகையில் 81.35 கோடி போ் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனா். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகளை இணைக்க தடையை ஏற்படுத்தவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘14 மாநிலங்கள் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தங்களது உணவுத் தானிய இருப்பு காலியாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவின் கடைக்கோடி மனிதருக்கும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும். கரோனா தொற்றின் போது மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. இது தொடர வேண்டும். யாரும் பசியுடன் இரவு தூங்கச் செல்லக்கூடாது என்பது நமது கலாசாரம். அதனை உறுதி செய்யவேண்டும்’ எனத் தெரிவித்தனா்.

மேலும், இ-ஷ்ரம் இணையதள பக்கத்தில் பதிவு செய்த புலம்பெயா் தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை டிச.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முந்தைய விசாரணையில், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளை வரையறுக்காமல், தேவையான மக்களை இச்சட்டத்தில் பயனாளிகளாக இணைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT