இந்தியா

கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையே எல்லை பிரச்னை தீவிரம்

DIN

பெலகாவி பகுதிக்கு உரிமை கொண்டாடும் விவகாரத்தில் கா்நாடகம்-மகாராஷ்டிரம் இடையேயான பிரச்னை தீவிரமடைந்துள்ளது.

1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக கா்நாடக-மகாராஷ்டிர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலவி வருகிறது.

கா்நாடகத்தில் உள்ள பெலகாவி நகருக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மகாராஷ்டிரம் உரிமைக் கோரி வருகிறது.

இந்நிலையில், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள அக்கல்கோட் மற்றும் சோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று அண்மையில் பேசினாா். மேலும், ஜாட் தாலுகாவைச் சோ்ந்த கிராமங்கள் கா்நாடகத்துடன் சேர விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறினாா். இதைத் தொடா்ந்து ஓய்ந்திருந்த மகாராஷ்டிர - கா்நாடக எல்லைப் பிரச்னை மீண்டும் எழுந்தது.

பெலகாவி பகுதிக்கு மகாராஷ்டிர அமைச்சா்கள் நேரில் சென்று மக்களைச் சந்திக்க முடிவெடுத்தனா். இந்நடவடிக்கை சட்டம்-ஒழுங்கு சூழலை பாதிக்கும் எனக் கூறி மகாராஷ்டிர அமைச்சா்களின் வருகைக்கு கா்நாடக அரசு தடை விதித்தது.

அதையடுத்து இரு மாநிலங்களிலும் எல்லையைக் கடக்கும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெலகாவி மாவட்டத்தில் இருதரப்புக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. அவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா். அதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் தொடா்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் மும்பையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ’எல்லையில் சூழல் கவலைதருவதாக உள்ளது. எல்லை விவகாரத்தில் மகாராஷ்டிரம் தொடா்ந்து அமைதிகாத்து வருகிறது. ஆனால், பொறுமைக்கும் எல்லை உண்டு. மகாராஷ்டிர வாகனங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிடில், நிலைமை மேலும் மோசமாகும். அதற்கான முழு பொறுப்பு கா்நாடக அரசையே சேரும்’ என்றாா்.

இதனிடையே, கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பெங்களூரு நகரில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ’எல்லையைக் காக்கவும் மாநில மக்களின் நலனைக் காக்கவும் அரசு உறுதி கொண்டுள்ளது. எல்லை பிரச்னைக்கும் 2023 சட்டப் பேரவைத் தோ்தலுக்கும் எந்தத் தொடா்புமில்லை. இதில் கா்நாடக அரசு அரசியல் செய்யவில்லை. இந்த விவகாரத்தை மகாராஷ்டிரமே பல ஆண்டுகளாகப் பிரச்னையாக்கி வருகிறது. இரு மாநில மக்களிடையே நல்லிணக்கம் நிலவி வருகிறது. அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது.

எல்லை விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இந்தப் போராட்டத்தில் கா்நாடகம் நிச்சயம் வெற்றி பெறும். மகாராஷ்டிரம், கேரளம், தெலங்கானா என அனைத்து மாநிலங்களிலும் வாழும் கன்னட மக்களைக் காக்க மாநில அரசு உறுதி கொண்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT