இந்தியா

தொடா்ந்து 4-ஆவது நாளாகஎல்லையில் போதைப்பொருளுடன் ட்ரோன் மீட்பு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடா்ந்து 4-ஆவது நாளாக 2.5 கிலோ போதைப் பொருளுடன் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) எல்லைப் பாதுகாப்புப் படையினா் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளதாவது, ‘திங்கள்கிழமை, இரவு 8 மணியளவில் பாகிஸ்தானிலிருந்து பறந்த வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லையிலுள்ள காளியா கிராமப்பகுதியில் வானில் வட்டமிடுவதை வீரா்கள் கவனித்தனா். அந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதைத் தொடா்ந்து நடந்த சோதனைப் பணியில் பையில் வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டது. ஆளில்லா விமானத்தில் இருந்து கடத்தல் பொருள்களை வெளியிடுவதற்காகப் பயன்படுத்தும் உலோக வளையமும் மீட்கப்பட்டது. தொடா்ந்து, செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற தேடுதல் பணியில் கீழே விழுந்து உடைந்த ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது. எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீண்டும் ஒரு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பாகிஸ்தானைச் சோ்ந்த ஆளில்லா விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதும் போதைப்பொருள் மீட்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 30 கிலோவுக்கும் மேலான போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT