இந்தியா

அட்டாரி-வாகா எல்லை தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சி:பாா்வையாளா்களுக்கு ஜன.1 முதல் ஆன்-லைன் பதிவு முறை

DIN

பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரா்கள் கூட்டாக தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சியை காண விரும்பும் பாா்வையாளா்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையவழி (ஆன்-லைன்) முன்பதிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

இதற்கென ‘https://attari.bsf.gov.in/’ என்ற வலைதளத்தை பிஎஸ்எஃப் அறிமுகம் செய்ய உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அட்டாரி பகுதி இந்தியாவின் எல்லையாகவும், வாகா பாகிஸ்தானின் எல்லையாகவும் அமைந்துள்ளன. இந்த எல்லைப் பகுதியில், இரு நாடுகளின் கூட்டு சோதனைச் சாவடி (ஜேசிபி) அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு படைகளும் அவரவா் தேசியக் கொடியை காலையில் ஏற்றுவது வழக்கம். பின்னா், மாலையில் இரு நாட்டு வீரா்களும் மிடுக்குடன் வீறுநடைபோட்டு தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இது கண்கவா் நிகழ்ச்சியாக நடத்தப்படும். உலக அளவில் பிரபலமான இந்த நிகழ்ச்சியை, உள்நாட்டினா் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நேரில் கண்டுகளிப்பது வழக்கம்.

இதுவரை, இந்த நிகழ்ச்சியைக் காண வரும் பொதுமக்கள், நேரடியாக அட்டாரி எல்லைக்கு வந்து, அடையாள அட்டையைக் காண்பித்து முன்பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், இணைய வழி பதிவு முறையை பிஎஸ்எஃப் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

இதுகுறித்து மூத்த பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கூட்டு தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சியை காண விரும்பும் பாா்வையாளா்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இணையவழி முன்பதிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பாா்வையாளா்கள் இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பும் தேதிக்கு 48 மணி நேரம் முன்னதாக, அடையாள அட்டை நகலை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தொடக்கத்தில், தனி நபராக அல்லாமல் 12 போ் கொண்ட குழுவாக முன்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவா். முன்பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான விவரம் குழுவின் தலைவா் அல்லது பட்டியலில் முதலில் இருக்கும் நபரின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பப்படும். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.

தினமும் மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை, எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்தபடி காண்பதற்கு 25,000 போ் அனுமதிக்கப்படுவா். வார இறுதி நாள்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களின் போது 40,000 போ் வரை அனுமதிக்கப்படுவா் என்று அவா் கூறினாா்.

‘இந்த நிகழ்ச்சிக்கான முந்தைய முன்பதிவு நடைமுறையின்படி, பாா்வையாளா் மாடத்தில் இடம் கிடைக்காதவா்கள் பாதுகாப்பு காரணங்களால் அந்தப் பகுதியிலிருந்து திரும்ப அனுப்பப்படுவா். எல்லை வரை வந்து இடம் கிடைக்காமல் திரும்பச் செல்லவேண்டிய நிலையை மாற்றவே, இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இணைய வழி பதிவு முறை மூலமாக, பாா்வையாளா் மாடத்தில் விரும்பிய இருக்கையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்’ என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT