இந்தியா

பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம்: அயோத்தியில் கூடுதல் பாதுகாப்பு

7th Dec 2022 03:32 AM

ADVERTISEMENT

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 30-ஆம் ஆண்டு தினமான செவ்வாய்க்கிழமை, அயோத்தியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. சற்று கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த காலங்களில் அயோத்தியில் இந்நாளில் ஊரடங்கு போன்ற நிலை காணப்பட்டது. எனினும் செவ்வாய்க்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது அமைப்புகள் திறந்திருந்தன. எனினும் போலீஸôர் உஷார்நிலையில் இருந்தனர்.
மற்ற நாள்களைப் போலவே அயோத்தி ராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். நகரில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 
கடந்த காலங்களைப் போலன்றி "சௌர்ய திவஸ்' எனப்படும் வீரத் திருநாளை விஸ்வ ஹிந்து பரிஷத் கொண்டாடவில்லை. அதேபோல் முஸ்லிம்களும் கருப்பு தினத்தை அனுசரிக்கவில்லை.
ராம ஜன்மபூமி நில வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 2019இல் தீர்ப்பளித்த நிலையில் ஹிந்து, முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் தற்போது அமைதியை விரும்புகின்றன.
கடந்த ஆண்டுகளில் பாபர் மசூதி இடிப்பு நினைவு தினத்தையொட்டி அயோத்தி நகரம் ஒரு கோட்டை போல வலுப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அத்தகைய கெடுபிடிகள் ஏதுமில்லை.
இது தொடர்பாக அயோத்தியின் மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜி.முனிராஜ் கூறுகையில் "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கமான ஏற்பாடுகள் நகரில் செய்யப்பட்டிருந்தன. சமூக வலைதளங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஹோட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அயோத்தி நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. இதுவரை வழக்கத்துக்கு விரோதமாக எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் நாங்கள் தீவிர உஷார்நிலையைக் கடைப்பிடித்து வருகிறோம்' என்றார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
 இந்நாளையொட்டி நிகழ்ச்சி எதற்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அயோத்தி வழக்கில் ஹிந்துக்கள் தரப்புக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால் டிசம்பர் 6ஆம் தேதியைக் குறிக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன. எங்கள் சங்கல்பம் நிறைவேறி விட்டதால், இந்நாளையொட்டி நடத்தப்படும் வீரத் திருநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் வாபஸ் பெறப்படப்பட்டு விட்டன. அமைதியான சூழலையே நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். 
எனவே பதற்றம் ஏற்படுத்தக்கூடிய அல்லது மற்றவர்களைப் புண்படுத்தக் கூடிய நிகழ்ச்சி எதையும் நடத்துவதில்லை என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. நம்பிக்கையையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கக் கூடிய எதையும் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் விரும்பவில்லை என்றார்.
எனினும் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று முஸ்லிம்களில் பலரும் கருதுகின்றனர். 
அயோத்தியில் உள்ள இரு மசூதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலையில் அமைதியான முறையில் தொழுகை நடைபெற்ற பிறகு திருக்குரான் ஓதப்பட்டது. இது தொடர்பாக பாபர் மசூதி வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவரான ஹாஜி மெஹ்பூப் கூறுகையில் "அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் நினைவாக நாங்கள் திருக்குரான் ஓதும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். வேறு எந்த நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்படவில்லை' என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT