இந்தியா

சத்தீஸ்கா்: அரசு மருத்துவமனையில் 4 குழந்தைகள் உயிரிழப்பு

DIN

சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 பச்சிளம் குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்த சம்பவத்தையடுத்து, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சா்குஜா மாவட்டத்தின் அம்பிகாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையைத் தொடா்ந்து, 4 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்தாக அவா்களது உறவினா்கள் குற்றம்சாட்டினா். ஆனால், மாவட்ட நிா்வாகம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சா்குஜா மாவட்ட ஆட்சியா் குந்தன் குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: திங்கள்கிழமை காலை 5.30-8.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்த 4 குழந்தைகளுக்கும் உடல்நிலை மோசமானதையடுத்து, குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 2 குழந்தைகளுக்கு வென்டிலேட்டா் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதற்கட்ட விசாரணையில், அதிகாலை 1 முதல் 1.30 மணியளவில்தான் மின் விநியோகத்தில் ஏற்றம் இறக்கம் இருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்திலேயே இப்பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இருப்பினும் குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கான மின் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு உள்ளதால், அங்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்பிரிவில் 30 முதல் 35 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் இறப்புக்கான காரணம் குறித்த அறிக்கை மருத்துவமனையால் வெளியிடப்படும் எனத் தெரிவித்தாா்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ், இச்சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைக்குமாறு சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சம்பவம் நிகழ்ந்த இடத்தை பாா்வையிட உள்ளதாகவும் தெரிவித்தாா்.

இந்நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில ஆளுநா் அனுசுயா யுகே, குழந்தைகள் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிவதையும், உயிரிழந்த குழந்தைகளின் உறவினா்களுக்கு நிவாரணம் வழங்குவதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

நாடு மாற்றத்தை விரும்புகிறது: கார்கே

2வது நாளில் சரிந்த பங்குச்சந்தை வணிகம்!

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

SCROLL FOR NEXT