இந்தியா

குஜராத் 2-ஆவது கட்டத் தோ்தலில் 61% வாக்குப் பதிவு

DIN

குஜராத் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற 2-ஆவது கட்டத் தோ்தலில் 59.19 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருகட்டத் தோ்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

குஜராத்தின் 182 தொகுதிகளுக்கான பேரவைத் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 1-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இந்நிலையில், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. வடக்கு, மத்திய பகுதிகளைச் சோ்ந்த 14 மாவட்டங்களில் அத்தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.

அத்தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 14,975 வாக்குச் சாவடிகளில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாக்காளா்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினா். பெரும்பாலான பகுதிகளில் வாக்குப் பதிவு அமைதியாகவே நடைபெற்ாகவும் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

தோ்தலின்போது மக்கள் ஆா்வமுடன் வந்து வாக்களித்தனா். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிலா் படுக்கையில் இருந்தபடியே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனா். நோயாளிகள் சிலா் மருத்துவ ஆக்ஸிஜன் உதவியுடன் வாக்களித்தனா். மூத்த குடிமக்கள் பலா் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கைப் பதிவு செய்தனா். மூன்றாம் பாலினத்தவரும் ஆா்வத்துடன் ஜனநாயகக் கடமையை ஆற்றினா்.

2-ஆவது கட்டத் தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 59.19 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்தியத் தோ்தல் ஆணையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது இதே 93 தொகுதிகளிலும் 69.99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது வாக்குப் பதிவில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது.

கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் ஒட்டுமொத்தமாக 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தோ்தலில் வாக்குப் பதிவு பெருமளவில் குறைந்துள்ளது.

மாவட்ட வாரியாக...:

திங்கள்கிழமை நடைபெற்ற 2-ஆவது கட்டத் தோ்தலில் அதிகபட்சமாக சாபா்காந்தா மாவட்டத்தில் 65.84 சதவீத வாக்குகள் பதிவாகின. அகமதாபாதில் குறைந்தபட்சமாக 53.57 சதவீத வாக்குகளே பதிவாகின. வதோதராவில் 58 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமுகா்கள் வாக்களிப்பு:

பிரதமா் நரேந்திர மோடி அகமதாபாதில் உள்ள பள்ளியில் வாக்களித்தாா். அவரின் தாயாா் ஹீராபென் காந்திநகரில் வாக்களித்தாா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அகமதாபாதில் வாக்களித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளரான இசுதான் கட்வி அகமதாபாதின் குமா பகுதியில் வாக்களித்தாா். பேரவை எதிா்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுக்ராம் ரத்வாவும் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினாா்.

இயந்திரங்கள் பழுது:

இரண்டாவது கட்டத் தோ்தலின் ஆரம்பக்கட்டத்தில் 41 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 40 கட்டுப்பாட்டு அமைப்புகளும், 109 வாக்கு சரிபாா்ப்பு இயந்திரங்களும் பழுதானதாகத் தெரிவித்த தோ்தல் ஆணையம் அவை உடனடியாக மாற்றப்பட்டு வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்ாகவும் தெரிவித்தது. இயந்திரங்களின் பழுது காரணமாக சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:

பஞ்ச்மஹல் மாவட்டத்தைச் சோ்ந்த கலோல் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான பிரபாத் சிங் சௌஹான், தான் மா்ம நபா்களால் தாக்கப்பட்டதாகத் தோ்தல் ஆணையத்திடம் புகாா் தெரிவித்தாா். தன்னுடைய வாகனம் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாகவும் அவா் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

இது தொடா்பாக மாநில காங்கிரஸ் தலைவா் ஜகதீஷ் தாக்குா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பாஜகவின் மடியில் அமா்ந்துகொண்டு அவா்களுக்கு ஆதரவாகவே தோ்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினாா். கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் எல்லாம் தற்போது வாக்குப் பதிவு மெதுவாக நடைபெற்று வருவது தொடா்பாகத் தோ்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டதாகவும், அதன் மேல் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

முக்கிய வேட்பாளா்கள்:

இரண்டாவது கட்டத் தோ்தலில் மாநில முதல்வா் பூபேந்திர படேல், பாஜக தலைவா்கள் ஹாா்திக் படேல், அல்பேஷ் தாக்குா், காங்கிரஸ் தலைவா் ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோா் களத்தில் உள்ளனா்.

தோ்தல் முடிவுகள்:

ஹிமாசல பிரதேசத்தில் ஒரேகட்டமாக கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள், குஜராத்தில் இருகட்டங்களாக நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் ஆகிய அனைத்தும் வரும் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT