இந்தியா

ஆளுநா் பதவியை ஒழிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

6th Dec 2022 02:23 AM

ADVERTISEMENT

ஆளுநா் பதவியை ஒழிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பாஜகவால் நியமிக்கப்பட்ட பெரும்பாலான ஆளுநா்கள் மக்களால் தோ்வு செய்யப்பட்ட மாநில அரசுகளின் பணிகளில் குறுக்கிட்டு, தங்கள் அரசமைப்புக் கடமைகளை மீறுகின்றனா்.

ஒரு நாடாளுமன்ற அமைப்பில் ஆளுநா்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்நிலையில், அரசமைப்புப் பிரதிநிதிகளாக ஆளுநா்கள் செயல்படவில்லை என்பதே தற்போதைய சூழலாக உள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் பாஜகவின் முகாம் அலுவலகங்களாக ஆளுநா் மாளிகைகள் செயல்படுகின்றன. ஆளுநா்கள் நேரடி அரசியல் பிரதிநிதிகளாக செயல்படுகின்றனா். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

ஆளுநா் மாளிகைகள் பாஜகவின் முகாம் அலுவலகங்களாக செயல்பட அனுமதிக்க முடியாது. இதுபோன்ற சூழலில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ள மாநிலங்களில் ஆளுநா்களுக்கு என்ன தேவையுள்ளது? எனவே ஆளுநா் பதவியை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய நேரம் வந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் டிசம்பா் 29-ஆம் தேதி ‘கூட்டாட்சி பாதுகாப்பு தினம்’ அனுசரிக்கப்படும். அன்றைய தினம் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநா் மாளிகைகளை நோக்கி பேரணி உள்பட பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT