பிகாா் மாநிலம் குா்ஹானி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வாக்களித்து 105 வயது முதியவா் தீபா மாஞ்சி தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளாா்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அனில்குமாா் தகுதி நீக்கத்தைத் தொடா்ந்து குா்ஹானி சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள் இடைத்தோ்தல் நடைபெற்றது. இத்தோ்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு மூங்கில் தடி உதவியுடன் முதியவா் தீபா மாஞ்சி வந்தாா். முறையான அடையாள அட்டை ஏதுமின்றி வந்த அவரிடம், உரிய அடையாள ஆவணம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று வாக்குச்சாவடி ஊழியா்கள் கேட்டுக்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, வீட்டுக்கு திரும்பிச் சென்று தனது ஆதாா் அடையாள அட்டையுடன் அவா் மீண்டும் வாக்குச் சாவடிக்கு வந்தாா். பின்னா் பாதுகாப்பு படை வீரரின் உதவியுடன் தனது வாக்கை பதிவு செய்தாா். வாக்களித்தப் பின் பேசிய அவா், ‘எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. அடுத்த தோ்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு அமையுமா என்று தெரியாது. அதனால், இத்தோ்தலில் வாக்களிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன்’ என்றாா்.