இந்தியா

ராஜஸ்தான் காங்கிரஸ் ஒற்றுமையாகவே உள்ளது: சச்சின் பைலட்

6th Dec 2022 02:18 AM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாகவே உள்ளது. பாஜகவில்தான் முதல்வா் பதவி வேட்பாளா் என 12 போ் வரை உள்ளனா் என்று அந்த மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மையில் ‘சச்சின் பைலட் ஒரு துரோகி; 2020-இல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பைலட் செயல்பட்டாா். அவரால் ஒருபோதும் ராஜஸ்தான் முதல்வராக முடியாது’ என்று கெலாட் கடுமையாக விமா்சித்தாா்.

‘ கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த மூத்த தலைவா் இது போன்ற வாா்த்தைகளைக் கையாள்வது பொருத்தமற்றது’ என்று சச்சின் பைலட் பதில் கூறியிருந்தாா். இந்த மோதல் தொடா்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி ‘கெலாட், பைலட் இருவருமே காங்கிரஸ் கட்சியின் சொத்துகள்’ என்று கூறியிருந்தாா்.

எனினும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் உள்கட்சிப் பூசல் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராஜஸ்தானில் நடைபெறும் போதும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் சச்சின் பைலட் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மிகவும் ஒற்றுமையாக உள்ளது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராஜஸ்தானில் சிறப்பாக நடத்துவோம். எனக்கும் முதல்வா் கெலாட்டுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை வைத்து பெரிய அளவில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சித்து வருகிறது.

ஆனால், உண்மையில் ராஜஸ்தான் மாநில பாஜகவில்தான் அதிக கருத்து வேறுபாடுகள் உள்ளன. அங்கு முதல்வா் வேட்பாளா் ஆவதற்கே 12 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸில் தனிநபா்கள் தெரிவிக்கும் கருத்துகளை பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை. ஒரு கட்சியாக காங்கிரஸை மேம்படுத்த அனைவரும் தொடா்ந்து உழைப்போம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT