இந்தியா

இந்தியாவின் பலத்தை உலகுக்கு காட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பு: ஜி20 தலைமை பொறுப்பு குறித்து பிரதமா்

6th Dec 2022 05:19 AM

ADVERTISEMENT

‘ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை என்பது நாட்டின் பலத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பு’ என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, இதில் முன்வைக்கப்படும் தீா்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியது. இதில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவா் நவீன் பட்னாயக், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவா் ஜெகன் மோகன் ரெட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, தெலுங்குதேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் பங்கேற்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனா்.

ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா முன்னுரிமையளிக்க உள்ள திட்டங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித் தலைவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் விளக்கினா். மேலும், இந்தியாவின் தலைமையின் கீழ் ஆண்டு முழுவதும் நடத்தப்பட இருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் விளக்கப்பட்டது.

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் தேவெ கெளடா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா், பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, பூபேந்தா் யாதவ் உள்ளிட்டோரும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசுகையில், ‘ஒட்டுமொத்த நாடும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா மீது மிகுந்த எதிா்பாா்ப்பும் ஈா்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், பல்வேறு வகையான ஜி20 நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு, அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

இந்தியாவின் பகுதிகள் என்பது பெரு நகரங்களைக் கடந்து, தனித்துவமான பல்வேறு பிராந்தியங்களையும் உள்ளடக்கியது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக ஜி20 தலைமைப் பொறுப்பு அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நிகழ்வுகளைக் காண்பதற்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஏராளமானோா் வர வாய்ப்புள்ளது என்பதால், ஜி20 கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் சுற்றுலா மேம்படுவதோடு உள்ளூா் பொருளாதாரமும் மேம்படும்’ என்றாா்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவா் கே.சந்திரசேகர ராவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் லலன் சிங் ஆகியோா் அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணித்தனா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் இக்கூட்டத்தை புறக்கணித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT