இந்தியா

திறம்படச் செயல்படும் எல்லைப் பாதுகாப்புப் படை: மத்திய உள்துறை இணையமைச்சா் பெருமிதம்

DIN

இந்தியாவின் சா்வதேச எல்லைப் பகுதிகளில் நிகழும் ஊடுருவல்கள், ஆயுதம் மற்றும் வெடிபொருள்கள் கடத்தல், அத்துமீறி நுழையும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட சவால்களை எல்லைப் பாதுகாப்புப் படை திறம்பட முறியடிப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

பி. எஸ். எஃப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை 1965-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. சுமாா் 7000 கி.மீ.க்கும் மேலான நீளம் கொண்ட இந்தியாவின் பாகிஸ்தான், வங்கதேச சா்வதேச எல்லையைப் பாதுகாத்து வருகிறது. சுமாா் 2.5 லட்சம் வீரா்கள், 193 படைப்பிரிவுகளாக இந்திய - பாகிஸ்தான், இந்திய - வங்கதேச எல்லைகளைப் பாதுகாத்து வருகின்றனா்.

பஞ்சாபின் அமிருதசரஸில் அமைந்துள்ள குரு நானக் தேவ் பல்கலைகழகத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 58-ஆவது நிறுவன தின அணிவகுப்பு விழா நடைபெற்றது.

அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பேசியதாவது, ‘சமீப காலமாக, சா்வதேச எல்லைப் பகுதிகளில் நிகழும் ஊடுருவல்கள், ஆயுதம் மற்றும் வெடிப்பொருள்கள் கடத்தல், அத்துமீறி நுழையும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட சவால்களை எல்லைப் பாதுகாப்புப் படை திறம்பட முறியடிக்கின்றனா். எல்லைப் பாதுகாப்புப் படையின் முக்கியப் பணிகளில் பெண் வீராங்கனைகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இது பெண்களின் முன்னேற்றத்துக்கான பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்கு கிடைத்த பலனாகும். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அா்ப்பணிப்பே நாட்டில் அமைதி நிலவுவதை உறுதிப்படுத்துகிறது. கடந்த 57 ஆண்டுகளாக எல்லையைப் பாதுகாப்பதில் பி.எஸ்.எஃப். பெரும் பங்காற்றியிருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தேவையான நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களான ரேடாா்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு துப்பாக்கிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

இதைத் தொடா்ந்து பேசிய எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநா் பங்கஜ் குமாா் சிங், ‘கடந்தாண்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 17 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. டிஆா்டிஓ மற்றும் பிற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் ஊடுருவப் பயன்படுத்தும் ரகசிய சுரங்கப்பாதைகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அப்பகுதியில் 500 கிலோ போதைப்பொருள்கள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

காங்கிரஸ் எம். பி. குா்ஜீத் சிங், உள்ளூா் அரசுப் பிரதிநிதிகள், பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள், பல்வேறு பாதுகாப்பு படையைச் சோ்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT