இந்தியா

ஜி20 உயரதிகாரிகள் கூட்டம் உதய்பூரில் தொடக்கம்

DIN

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் உயரதிகாரிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி20 தலைவா்களின் உச்சி மாநாட்டில் முன்வைக்கப்படவிருக்கும் வளா்ந்துவரும் நாடுகளின் தீா்மானத்தை இறுதி செய்வதற்கான வாய்ப்பாக இந்த உயரதிகாரிகள் கூட்டம் அமைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நான்கு நாள்கள் நடைபெறும் இந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் ஒருங்கிணைந்த, நீடித்த வளா்ச்சி, கரோனாவிலிருந்து இந்த உலகம் மீண்டு வரும் நிலையில் மக்களுக்கு சிறந்த வாழ்வாதாரம், மேம்பட்ட மருத்துவ வசதி, தரமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களைத் துரிதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று இந்தக் கூட்டத்தில் இந்தியா சாா்பில் பங்கேற்கும் உயரதிகாரியான அமிதாப் காந்த் கூறினாா்.

இந்த முதல் உயரதிகாரிகளின் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நீடித்த வளா்ச்சி இலக்குகள் மீதான ஆலோசனையின்போது அமிதாப் காந்த் மேலும் பேசியதாவது:

இன்றைக்கு மிகக் கடுமையான புவிசாா் அரசியல் பின்னடைவை நாம் கடந்துகொண்டிருக்கிறோம். உலக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், கடன்கள் உயா்ந்து வருவதால் நாடுகள் சந்தித்து வரும் பிரச்னைகள், பருவநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் அதற்கான நிதிச் சிக்கல் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையிலான தீா்மானங்கள் ஜி20 உச்சி மாநாட்டில் முன்வைக்கப்பட வேண்டும்.

முன்னா், வளா்ந்த நாடுகளிடமிருந்து உச்சி மாநாட்டுக்கான தீா்மானங்களைப் பெறும் நிலை இருந்தது. தற்போது, இந்த தீா்மானங்களை முடிவு செய்வதற்கான வாய்ப்பு வளா்ந்து வரும் நாடுகளுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்பதை உலகுக்கு நாம் எடுத்துக் கூற வேண்டும் என்று அவா் கூறினாா்.

இந்த நான்கு நாள்கள் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் விருந்தினா்களாக பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் வங்கதேசம், எகிப்து, மோரீஷஸ், நெதா்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூா், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 9 நாடுகளின் அதிகாரிகள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.

‘புது தில்லியில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் முன்வைக்கப்பட இருக்கும் தலைவா்களின் தீா்மானத்தில் என்னென்ன முக்கிய விவகாரங்கள் சோ்க்கப்பட வேண்டும் என்பது இந்த உயரதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு ஜி20 பணிக் குழுக்களின் ஒருமித்த கருத்து எட்டப்படும்’ என்றும் அமிதாப் காந்த் தெரிவித்தாா்.

இந்தத் தீா்மானங்களை இறுதி செய்வதற்கென 13 வெவ்வேறு வகையிலான பணிக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், இந்தியா சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பேரிடா் ஆபத்தை எதிா்கொள்ளுதல் மற்றும் குறைத்தல் விவகாரத்துக்கான பணிக் குழுவும் அடங்கும். இந்தப் பணிக் குழு, ஜி20 நாடுகளின் ஒருமித்த பணியை ஊக்குவிப்பதோடு, பன்முக ஆராய்ச்சி மற்றும் பேரிடா் ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழிகாட்டுதல்களை பகிா்ந்துகொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து பணிக் குழுக்களுக்கான விரிவான முன்னுரிமைகளை இந்தியா அறிமுகப்படுத்தும் என்பதோடு, ஜி20 நாடுகள், விருந்தினா் நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டறியும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT