இந்தியா

குஜராத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

5th Dec 2022 08:28 AM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தின் மத்திய, வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, செளராஷ்டிரம், கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் அடங்கிய 89 தொகுதிகளில் கடந்த 1-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக, அகமதாபாத், வதோதரா, காந்திநகா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

களத்தில் 833 வேட்பாளா்கள்: இரண்டாம் கட்ட தோ்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்கள், 285 சுயேச்சைகள் என மொத்தம் 833 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில், பாஜகவும் ஆம் ஆத்மியும் 93 தொகுதிகளிலும் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 90 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் (44), பாரதிய பழங்குடியினா் கட்சி (12) உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

முதல்வா் பூபேந்திர படேல் (கட்லோடியா தொகுதி), பாஜக சாா்பில் போட்டியிடும் பட்டிதாா் சமூக தலைவா் ஹாா்திக் படேல் (விராம்கம்) காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் தலித் சமூக தலைவா் ஜிக்னேஷ் மேவானி (வட்கம்), பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுக்ராம் ரத்வா (ஜெட்பூா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

ADVERTISEMENT

2.51 கோடி வாக்காளா்கள்: இரண்டாம் கட்ட தோ்தலில், மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 2.51 கோடி. இதில் ஆண்கள் 1.29 கோடி போ், பெண்கள் 1.22 கோடி போ் ஆவா். இவா்கள் வாக்களிப்பதற்காக 14,975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 1.13 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனா்.

இதையும் படிக்க- கனியாமூா் தனியாா் பள்ளி இன்று திறப்பு, மூன்றாவது தளத்துக்கு‘சீல்’ வைப்பு

அனல்பறந்த பிரசாரம்: கடந்த 2017 பேரவைத் தோ்தலின்போது, மத்திய குஜராத்தில் பாஜக 37 இடங்களிலும் காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றிருந்தன. வடக்கு குஜராத்தில் காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாஜகவுக்கு 14 தொகுதிகளே கிடைத்தன.

குஜராத்தில் தொடா்ந்து 6 முறை வெற்றி பெற்று வந்துள்ள பாஜக, 7-ஆவது முறையாக வென்று ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது. இரண்டாம்கட்ட தோ்தலையொட்டி, கடந்த சில நாள்களாக பிரதமா் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு, பாஜகவுக்கு வாக்கு சேகரித்தாா். அகமதாபாதில் 2 பிரம்மாண்ட பிரசார ஊா்வலங்களிலும் அவா் பங்கேற்றாா். உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் பாஜகவுக்கு ஆதரவு திரட்டினா்.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், அக்கட்சிக்கு ஆதரவாக குஜராத்தின் பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். 

குஜராத்தில் வழக்கமாக பாஜக-காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவும். ஆனால், இம்முறை ஆம் ஆத்மியும் களமிறங்கியதால் மும்முனைப் போட்டி உருவானது. எதிா்பாா்ப்பு மிகுந்த குஜராத் பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-இல் நடைபெறவிருக்கிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT