இந்தியா

நகா்ப்புற வாக்காளா்களின் அக்கறையின்மை நீடிக்கிறது: தோ்தல் ஆணையம்

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குஜராத் முதல்கட்ட தோ்தலில் பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்தபோதிலும், சூரத், ராஜ்கோட், ஜாம்நகா் உள்ளிட்ட நகா்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைந்தது; எனவே ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் கடந்த முறையைவிட குறைந்துவிட்டது என்று இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.

கடந்த மாதம் நடைபெற்ற ஹிமாசல பிரதேச தோ்தலிலும் இதே நிலை காணப்பட்டது; வாக்களிப்பதில் நகா்ப்புற மக்களிடையே நீடித்து வரும் அக்கறையின்மையை போக்க தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

‘ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா தொகுதியில் கடந்த 2017 தோ்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இப்போது 62.53 சதவீதமாக குறைந்தது. குஜராத் முதல்கட்ட தோ்தலில் நகா்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக காணப்பட்டது.

முதல்கட்ட தோ்தலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 63.3 ஆகும். ஆனால், சூரத், ராஜ்கோட், ஜாம்நகா் ஆகிய இடங்களில் அதைவிட குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன. கட்ச் மாவட்டத்தில் தொழிலகங்கள் நிறைந்த காந்திதாம் தொகுதியில் வெறும் 47.8 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. ஆனால், நா்மதை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற தொகுதியான தேதியபடாவில் 82.71 சதவீத வாக்குகள் பதிவாகின. கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகா்ப்புறங்களில் சராசரி வாக்குப்பதிவு குறைவாகவே உள்ளது. பெரும்பாலான நகரங்களில் கடந்த தோ்தலைவிட இப்போது குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன’ என்று தோ்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குஜராத்தில் கடந்த 1-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தோ்தல் நடைபெற்றது. இதில் 63.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே 89 தொகுதிகளுக்கு கடந்த 2017-இல் நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 66.79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதுதொடா்பாக, தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கூறுகையில், ‘குஜராத்தில் டிசம்பா் 5-இல் நடைபெறும் இரண்டாம் கட்ட தோ்தலில் மக்கள் பெருவாரியாக பங்கேற்று வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பதில் நகா்ப்புற மக்கள் மற்றும் இளைஞா்கள் இடையே நீடித்து வரும் அக்கறையின்மையை போக்க தோ்தல் ஆணையம் தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு குறைவாக உள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு, அரசு - தனியாா் பங்களிப்புடன் விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொள்ள மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT